Published : 05 Jun 2022 06:56 PM
Last Updated : 05 Jun 2022 06:56 PM
கோவை: சுற்றுச்சூழல், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மருதமலைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பை, குடிநீர் பாட்டில்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முக்கிய விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் பலமடங்கு அதிகமாக இருக்கும். கோயில் வனப்பகுதியில் அமைந்துள்ளதால் கோயில் அடிவாரம், மலைப்பகுதியில் மான், யானை, சிறுத்தை போன்ற விலங்குகளின் நடமாட்டம் இருக்கும்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம், மருதமலை செல்லும் பாதையில் இருந்த யானையின் சாணத்தில் முககவசம், காலியான பால் கவர், சாம்பார் பொடி பாக்கெட், பிஸ்கட் கவர், சானிடரி நாப்கின், பெண்கள் தலைமுடியை கட்டப்பயன்படும் பேண்ட் உள்ளிட்டவை இருந்தது வன உயிரின ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருந்தபோதிலும் இது எதையும் பொருட்படுத்தாமல் விலங்குகள் வசிக்கும் வனப்பகுதிக்குள் மக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை தூக்கி எறிந்து வந்தனர்.
அதேபோல, மருதமலை அடிவார பகுதியில் உள்ள கடைகளில் விற்கப்படும் வெள்ளரிக்காய், மாங்காய் போன்ற பொருள்களை துண்டுகளாக்கி பிளாஸ்டிக் கவரில் வைத்துதான் விற்பனை செய்கின்றனர். அதை வாங்கி உண்ணும் மக்கள், அந்த கவரை அங்கேயே தூக்கி எறிந்துவிட்டு வருகின்றனர். இதுதவிர, பூஜைக்காக வாங்கி செல்லப்படும் பொருட்களும் பாலித்தீன் கவரில் விற்கப்படுகின்றன.
இந்நிலையில், உலக சுற்றுச்சூழல் தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் கோயிலுக்கு பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச்செல்ல கோயில் நிர்வாகம், வனத்துறையினர் இணைந்து தடை விதித்துள்ளனர். கார், பேருந்து மூலம் மலைப்பாதை வழியாக இன்று கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்கள் ஏதேனும் எடுத்து வந்துள்ளார்களா என சோதிக்கப்பட்ட பின்னரே மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “மலையின் மேல் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை அளிக்க வேண்டாம் என நோட்டீஸ் அளித்துள்ளோம். அடிவார பகுதிகளில் உள்ள கடைகளிலும் அதையே அறிவுறுத்தியுள்ளோம். வரும் நாட்களிலும் தொடர்ந்து சோதனை நடைபெறும். தடை குறித்து ஒலிப்பெருக்கி மூலமும் பக்தர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT