Published : 05 Jun 2022 03:54 PM
Last Updated : 05 Jun 2022 03:54 PM
சென்னை: அண்ணாமலை அறிவுபூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டல் செய்துள்ளார்.
தாய் - சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தில் அரசின் நிர்பந்தத்தால் ஆவின் பொருள் புறக்கணிக்கப்பட்டதாலும் , தனியார் நிறுவனம் மூலம் இரும்புச் சத்து திரவம் கொள்முதல் செய்ததாலும் தமிழக அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து அமைச்சர் சுப்பிரமணியன், "அண்ணாமலை அறிவுபூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன். ஆனால் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். டெண்டர் ஓபன் செய்வதற்கு முன்பாகவே அதில் முறைகேடு நடைபெற்று உள்ளது என யூகங்களின் அடிப்படையில் பேசி வருகிறார்.
முறைகேடு நடந்து இருந்தால் அதனை அவர் நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் அவர் மற்ற துறைகளின் கூறி வரும் குற்றச்சாட்டுகளும் பொய் என்பது அனைவருக்கும் தெரிந்து விடும்.
டெண்டர் பணிகள் முடிவடையும் முன்பாக ஊழல் நடைபெற்று உள்ளது, நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது. இரண்டு நாட்களுக்கு பின்னரே அந்த டெண்டர் ஓபன் செய்யப்பட உள்ளது. தவறு நடைபெற்று உள்ளது என நிரூபித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT