Last Updated : 05 May, 2016 12:23 PM

 

Published : 05 May 2016 12:23 PM
Last Updated : 05 May 2016 12:23 PM

கடும் போட்டி: உளுந்தூர்பேட்டையில் வெல்வாரா விஜயகாந்த்?

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடுவதால் விஜபி தொகுதியாக மாறியிருக்கிறது. அவரை மையப்புள்ளியாகக் கொண்டு அங்கு தேர்தல் களம் விறுவிறுப்பின் உச்சத்தில் இருக்கிறது. இதனால் ஒட்டு மொத்த தமிழக அரசியல் நோக்கர்களின் பார்வை உளுந்தூர்பேட்டை பக்கம் திரும்பியிருக்கிறது.

தொகுதியின் சிறப்புகள்

உளுந்தூர்பேட்டை தொகுதியில் மஹாபாரத வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கூவாகம் கூத்தாண்டவர் கோயில், பரிக்கல் ஸ்ரீநரசிம்மர் கோயில்,திருநறுங்குன்றத்தில் சமணர்கள் (அப்பண்டநாதர்) கோயில், எலவனாசூர்கோட்டையில் அர்த்தநாரீஸ்வரர் கோயில், திருநாவலூரில் பக்த ஜனேஸ்வரர் கோயில் மற்றும் சுந்தரர் அவதரித்த திருத்தலம் மற்றும் மடம், திருவெண்ணெய்நல்லூர் சிவஞான போதம் அருளிய மெய்கண்ட நாயனாரின் ஜீவ சமாதி ஆகியவை உள்ளது.

உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமம் மற்றும் கல்வி நிறுவனங்கள், 3 பொறியியல் கல்லூரிகள் பாலி கிராமத்தில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10-ம் அணி இவையெல்லாம் இத்தொகுதிக்குள் இருக்கின்றன. 2-ம் உலகப் போரின் போது பயன்படுத்திய பழமையான விமான தளம் ஒன்றும் உளுந்தூர்பேட்டையின் பழமையை பறைசாற்றுகிறது.

தொகுதியின் அரசியல் நிலவரம்

உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி 1952-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1971-ஆம் ஆண்டு வரை ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இத்தொகுதி இருந்தது. 1977-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் உளுந்தூர்பேட்டை தொகுதி பிரிக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற 14 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக 6 முறையும், அதிமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், சுயேட்சை ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளது. தற்போதைய அதிமுக எம்எல்ஏ-வான குமரகுரு மீண்டும் அதிமுக வேட்பாளராக களத்தில் உள்ளார்.

வாக்காளர்கள் விவரம்

ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 38 ஆயிரத்து 131 பேர், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 34 ஆயிரத்து 515 பேர், திருநங்கைகள் 42 பேர் என மொத்தம் 2 லட்சத்து 72 ஆயிரத்து 685 பேர் உளுந்தூர்பேட்டை தொகுதியில் உள்ளனர். மக்கள்தொகையில் வன்னியர் சமுதாயத்தினர் பெரும்பான்மையினராக உள்ளனர். மொத்தம் 337 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

வேட்பாளர்கள் விபரம்

இத்தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடுவதால் இத்தொகுதி விஐபி தொகுதியாக மாறியுள்ளது. விஜயகாந்த் போட்டியிடுவதை அறிந்த பாமக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர் ராமமூர்த்தியை மாற்றிவிட்டு, அக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலுவை வேட்பாளராகக் களமிறக்கியுள்ளது.

திமுக கூட்டணியில் உளுந்தூர்பேட்டைத் தொகுதி முதலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர் மமக, திமுகவிடமே தொகுதியை திரும்ப ஒப்படைத்ததால், திமுக வேட்பாளராக ஜி.ஆர்.வசந்தவேல் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

பிரதானக் கட்சிகளான அதிமுக வேட்பாளர் ஆர்.குமரகுரு, திமுக வேட்பாளர் ஜி.ஆர்.வசந்தவேல் ஆகிய இருவரும் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வசித்து வருகின்றனர்.தேமுதிக வேட்பாளர் விஜயகாந்த் மற்றும் பாமக வேட்பாளர் பாலு ஆகியோர் தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள்.

தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை சந்தித்து எந்தெந்த வாக்குறுதிகள் அடிப்படையில் வாக்கு சேகரிக்கிறீர்கள்? என்பது குறித்து வேட்பாளர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:

ஆர்.குமரகுரு (அதிமுக வேட்பாளர்) : அதிமுகவின் சார்பில் தொடர்ந்து இருமுறை எம்எல்ஏ-வாக இருந்து சேவை புரிந்துள்ளேன். தொகுதி மக்களைப் பொறுத்தவரை அதிமுகவுக்கு சாதகமான தொகுதி இது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழக முதல்வர் அறிவித்து செயல்படுத்திய திட்டங்களைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறேன், மேலும் முதல்வரின் அறிவித்த திட்டங்களின் கீழ் பயனடைந்த எனது தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் கைப்பட கடிதம் எழுதி வாக்கு சேகரிக்கிறேன். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் நான் தொகுதியில் மேற்கொண்ட நலத்திட்ட பணிகள், அரசின் சாதனைகளை புத்தமாக அச்சடித்து வாக்காளர்களிடம் விநியோகித்து வருகிறேன். இது மக்களிடம் எனக்கு நல்ல பெயரை ஏற்படுத்தியுள்ளது.விஜயகாந்தை எனக்கு போட்டியாளராக கருதவில்லை. தொகுதி மக்களின் ஆதரவு எனக்கு தான்.

ஜி.ஆர்.வசந்தவேல் (திமுக வேட்பாளர்) : தொடர்ந்து இருமுறை அதிமுக வசம் இந்த தொகுதி இருந்து வருகிறதே தவிர எந்தவித அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படவில்லை. குறிப்பாக குடிநீர் பிரச்சனை இத்தொகுதியில் தலை விரித்தாடுகிறது. குக்கிராமங்களைக் கொண்ட இத்தொகுதியில் சாலை வசதிகள் மிக மோசமாக உள்ளது. இரவில் யாருக்காவது பிரசவவலி ஏற்பட்டாலோ, விஷ ஜந்துக்கள் தீண்டினாலோ அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லக் கூட முடியாத நிலையில் தான் சாலைகள் உள்ளன. வேலைவாய்ப்பை ஏற்படுத்தக் கூடிய தொழிற்சாலைகள் ஏதும் இல்லாததால் இத்தொகுதியைச் சேர்ந்த பலர் பிழைப்பு தேடி அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றனர். அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட திருநாவலூர் பகுதியில் அரசின் நிவாரணம் சென்றடையவே இல்லை. 'இப்பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காணுவேன்' எனக் கூறி வாக்கு சேகரித்து வருகிறேன். எனது போட்டியாக அதிமுக வேட்பாளரை கருதுகிறேன். இந்தமுறை அவரை வீழ்த்துவேன். ஒவ்வொரு கிராமத்துக்குச் செல்லும்போதும் மக்களின் வரவேற்பு நன்றாக உள்ளது.

வழக்கறிஞர் பாலு, (பாமக வேட்பாளர்): ஒரு தொகுதியின் அடிப்படை வசதிகள், தங்களுக்கான அடிப்படை உரிமைகள் என்னவென்றே தெரியாமலேயே 'தங்கள் தலையெழுத்து அவ்வுளவு தான்!' என்ற மனநிலையில் வாழ்ந்து வருகின்றனர் இத்தொகுதி வாக்காளர்கள். குடிநீர் மற்றும் சாலை வசதி மிக மோசமாக உள்ளது. இத்தொகுதிக்கு உட்பட்ட ஒல்லியம்பாளையத்தில் சிறுநீரகக் கோளாறு காரணமாக 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேர் இறந்துள்ளனர். இதற்குக் காரணம் உப்புநீரை குடிநீராக பருகியது தான். இதுபோன்று 109 பிரச்சனைகள் தொகுதி முழுவதும் உள்ளது. அவற்றுக்குத் தீர்வுகாண இரு திராவிடக் கட்சிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. சினிமா மோகத்தைக் கொண்டு ஒவ்வொரு முறையும் தொகுதிகளை மாற்றிக்கொண்டே வரும் விஜயகாந்த்க்கு இந்த முறை உளுந்தூர்பேட்டை வாக்காளர்கள் பாடம் புகட்டுவது உறுதியாகிவிட்டது. இவர் ஏற்கனவே வெற்றிபெற்ற தொகுதிகளில் என்ன செய்தார் என்பதை பட்டியிலிட முடியுமா? கிராம மக்களின் அறியாமையை தனது பலமாகக் கருதி தேர்தலில் போட்டியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் விஜயகாந்த். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இத்தொகுதியை உலகறியச் செய்ய வேண்டும்.

என்னை பொதுமக்கள் நன்கறிவார்கள். சமச்சீர் கல்வி, நுழைவுத் தேர்வு, தேசிய நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்துதல், அப்பாவித் தமிழர்கள் மீது ஆந்திர அரசு நடத்திய துப்பாக்கிச் சூடு போன்ற பல பொதுப் பிரச்சனைகளுக்காக நீதிமன்றம் சென்று போராடி வெற்றி பெற்றிருக்கிறேன். இத்தொகுதி மக்கள் என்னை தேர்வு செய்தால் ஒரு எம்எல்ஏ என்றால் எப்படி இருக்கவேண்டும்?, தொகுதி மக்களுக்கு அவர் ஆற்றவேண்டிய பணிகள் என்ன?, தொகுதியில் நிலவும் பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது? என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்வேன்.

தேமுதிக இளைஞரணித் தலைவர் எல்.கே.சுதீஷ் (தேமுதிக தலைவர் விஜயாகந்த் மைத்துனர்): தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்தத் தொகுதியில் நிச்சயம் வெற்றிபெறுவார். இந்தத் தொகுதி முதல்வரின் தொகுதி என்ற அந்தஸ்தை பெறும். இந்தத் தேர்தலில் விஜயகாந்த் முதலில் போட்டியிட விரும்பியது ஆம்பூர். ஆனால் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை வழங்கியதன் அடிப்படையிலேயே அவர் உளுந்தூர்பேட்டையை தேர்வு செய்தார். மேலும் உளுந்தூர்பேட்டைக்கு பக்கத்திலுள்ள விருத்தாசலம் தொகுதியிலும், ரிஷிவந்தியத்திலும் அவர் வெற்றிபெற்று அங்கு மேற்கொண்ட மக்கள் நலத்திட்டங்கள் இத்தொகுதி மக்களுக்குத் தெரியும்.

தற்போது அவர் வெற்றி பெற்று முதல்வரானால் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிப்பார். இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை கரும்பு விவசாயிகள் அதிகம் உள்ளனர். அவர்களின் வேலைவாய்ப்புக்கேற்ற வகையில் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படும், பிழைப்புத் தேடி அண்டை மாநிலங்களுக்கு செல்பவர்களுக்காக இந்தத் தொகுதியிலேயே வேலைவாய்ப்பை ஏற்படுத்தி அவர்களும் குடும்பத்தினரோடு இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். விஜயகாந்த் தொகுதி மாறினால் மட்டும் கேள்வி எழுப்புபவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தொகுதி மாறி நிற்கும் போது கேள்வி எழுப்புவதில்லையே ஏன்? தேமுதிக தொண்டர்களும், கூட்டணிக் கட்சி தொண்டர்களும் தொகுதி முழுவதும் தீவிர களப்பணியாற்றி வருவதால் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விஜயகாந்த் வெற்றிபெறுவார்.

தொகுதியின் தற்போதைய தேவை என்ன? - தொகுதி வாசிகளின் கருத்து

ஆண்டிக்குழி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள்: யார் வந்து என்ன செய்யப் போறாங்க, வெள்ளம் வந்தப்ப யாரும் வரல. தொண்டு நிறுவனம்ன்னு சிலரு வந்த கொஞ்சம் கொடுத்தாங்க அதோடு சரி. அரசாங்கத்து மூலமா ஒன்னும் செய்யல. கொடுத்துக்கிட்டு இருந்த உதவி தொகையும் நிறுத்திட்டாங்க. மொதல்ல குடிக்க நல்ல தண்ணியும், வருமானத்துக்கு வழியும் சொல்லுங்க. அப்புறமா யாருக்கு ஓட்டுப் போடறதுன்னு முடிவு செய்யலாம்.

மணிமாறன், தனியார் நிறுவன மென்பொருள் நிறுவன ஊழியர்: அரசு பெண்கள் கல்லூரி அமைக்கனும் .உயர் கல்விக்காக பெரும்பாலான இளம் பெண்கள் விழுப்புரத்துக்கும், விருத்தாசலத்துக்கும் போற நிலைமை தான் இருக்கு. அதேபோல மருத்துவமனைய தரம் உயர்த்தனும், உளுந்தூர்பேட்டை வழியாக செல்லக்கூடிய ரயில்களை நிறுத்திச் செல்லவேண்டும்

கணேசன், வெல்டிங் பட்டறை உரிமையாளர்: தொழில் வளர்ச்சி இல்லாததால் பெரும்பாலான இளைஞர்கள் வெளிநாடு, அண்டை மாநிலங்களுக்கு போய்க்கிட்டு இருக்காங்க. இதனால பல இளைஞர்கள் போலியான நிறுவனங்கள்கிட்ட மாட்டிகிறாங்க.முதல் வேலையா அரசு சார்பில் ஒரு தொழில் பேட்டையை தொடங்கனும்.

வனஜா, வங்கி ஊழியர்: மாநிலத்தின் மையப்பகுதியாகவும், விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சிறு தொழில் முனைவோர் கூட்டமைப்பை உருவாக்கி தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவது அவசியம். அதை செய்தாலே பெரும்பாலான பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்

திமுக, அதிமுக இரு கட்சிகளின் வேட்பாளர்களும் தொகுதி சார்ந்தவர்கள் என்பதால் ஒவ்வொரு கிராமத்திலும் உறவினர்கள் மூலமாக தீவிர களப்பணியாற்றிவருகின்றனர். சுவர் விளம்பரங்களிலும் திமுக, அதிமுக இரு கட்சியினரே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள இத்தொகுதியில் பாமக வேட்பாளரான பாலுவும் பலமான வேட்பாளராகவே வலம் வருகிறார்.கடும் போட்டி இருப்பதை அறிந்த விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ், உளுந்தூர்பேட்டையில் முகாமிட்டு கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் கூட்டணிக் கட்சியினரோடு கிராமம் கிராமமாக வலம் வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x