Published : 04 Jun 2022 07:13 PM
Last Updated : 04 Jun 2022 07:13 PM
ஈரோடு: “ஈரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''ஈரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை மற்றும் சாக்கடை வசதிகள், பாலம் கட்டுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு பணிகளில் குளறுபடிகள் உள்ளன. தவறிழைத்தவர்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய தகவல்களை திரட்டி வருகிறார்.
ஈரோடு நகரில் பொலிவுறு திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதனால்தான் குடிநீர் பிரச்சனை கூட ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் கழிவுநீர் செல்லும் பைப்புகள் உயரமான இடத்திலும் வீடுகள் தாழ்வாகவும் உள்ளன. சாதாரண மக்களால் கூட இந்த குறைபாட்டை புரிந்துகொள்ள முடியும்.
எனவே, குறைபாடுகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே திட்டத்தின் கீழ் பல பணிகள் நடைபெற்று வருவதால் அந்த குளறுபடிகளை சரி செய்வதில் மிகுந்த சிரமம் உள்ளது.
இதேபோல் வீட்டுவசதி வாரியத்தில் தரமற்ற வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவையெல்லாம் கடந்த ஆட்சியில் நடைபெற்ற பணிகள். இனி எங்கள் ஆட்சியின் புதிய திட்டங்கள் பணிகள் அனைத்தும் குறைபாடுகளின்றி இருக்கும்.
எதிர்கட்சித் தலைவர் கஞ்சா விநியோகம் தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக கூறுகிறார். அதிலும் குறிப்பாக மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் நிலை உள்ளதாக கூறுகிறார். ஆனால் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் சமீபத்தில் 240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குற்றங்கள் அதிகரித்து விட்டது என்று அர்த்தமல்ல. குற்றங்களை கண்காணித்து இனி நடக்காமல் இருக்க செய்யப்பட்ட நடவடிக்கையாகும்.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை மாணவரிடையே போதைப் பொருள் பழக்கம் இல்லை. போதைப் பொருள் விற்பவர்கள் மற்றும் கொண்டு வருபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.
திமுக சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டித் தேர்வுகளில் பங்கேற்க நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு போதுமான பேருந்து வசதி இல்லையென்றால் போக்குவரத்து கழகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு தமிழகத்தில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால் தற்போது பல இடங்களில் அரசு சார்பிலேயே பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே, அடுத்த ஆண்டு வெற்றி பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT