Published : 04 Jun 2022 04:07 PM
Last Updated : 04 Jun 2022 04:07 PM

“பள்ளி ஆசிரியர்களை எதிரி போல் நடத்துவதை நிறுத்துங்கள்” - தமிழக அரசுக்கு தினகரன் வலியுறுத்தல்

டிடிவி தினகரன் | கோப்புப் படம்

சென்னை: “பள்ளி ஆசிரியர்களை எதிரி போல் நடத்துவதை நிறுத்திக்கொண்டு, அவர்களோடு அரசு சரியான முறையில் கலந்து ஆலோசித்து செயல்பட வேண்டும்” என்று அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி தொடங்கி 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. சுமார் 26 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் 170 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 1-ம்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இப்பணியில் சுமார் 80,000 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், விடைத்தாள் திருத்தும் பணிக்கு சில தனியார் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் பணி விடுவிப்பு செய்யப்படவில்லை என்று தெரியவந்தது.

இதனால், சென்னை உட்பட சில மாவட்ட பகுதிகளில் திருத்துதல் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கல்வித் துறைக்கு தொடர் புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து திருத்துதல் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில், ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்து எதிரி போல் தமிழக அரசு நடத்தவேண்டாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ''தமிழக அரசால் சரியான திட்டமிடுதல் இன்றி மேற்கொள்ளப்பட்ட 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியைப் பல இடங்களில் ஆசிரியர்கள் புறக்கணித்திருக்கின்றனர்.

விடைத்தாள் திருத்துவதில் தாமதம் ஏற்பட்டால், தேர்வு முடிவுகள் வெளியாவதிலும் மாணவச் செல்வங்கள் உயர் படிப்புகளில் சேர்வதிலும் தேவையற்ற தாமதம் ஏற்படும்.

கல்வித் துறையில் தொடர்ந்து அரங்கேறி வரும் இத்தகைய குளறுபடிகள் நல்லதல்ல. இனியாவது ஆசிரியர்களை எதிரி போல் நடத்துவதை நிறுத்திக்கொண்டு, அவர்களோடு அரசு சரியான முறையில் கலந்து ஆலோசித்து செயல்பட வேண்டும்'' என்று தினகரன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x