Published : 04 Jun 2022 02:23 PM
Last Updated : 04 Jun 2022 02:23 PM
புதுச்சேரி: “புதுச்சேரியில் மின்சாரம், நல்ல தண்ணீர், தொழிற்சாலைகளுக்கு தேவையான இடங்களை உடனடியாக தேர்வு செய்து கொடுக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு விதமான பிரச்சினைகள் தீர்க்கப்படும்” என்று அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
தொழில்துறை நிறுவனங்களுடன், தொழில்துறை சம்மந்தமான ஆலோசனை கூட்டம் தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தொழில்துறை நிறுவனங்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம், "புதுச்சேரி மாநிலத்தை ‘பெஸ்ட் புதுச்சேரியாக’ உருவாக்குவோம் என்று பிரதமர் சொன்னதை, மத்திய உள்துறை அமைச்சர் உறுதி செய்துவிட்டு சென்றிருக்கிறார். அந்த அடிப்படையில் புதுச்சேரி மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை கொண்டு வரவேண்டும் என்பதற்காக புதுச்சேரி அரசும், பிரெஞ்சு அரசும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்திருக்கின்றோம். அதன் முதல் முயற்சியாக நேற்று தொழில்முனைவோர் மாநாடு இங்கு நடத்தப்பட்டது.
இதில் 28 பிரெஞ்சு நிறுவனங்களும், 58 பிரெஞ்சு மற்றும் இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்களும் என மொத்தம் 86 நிறுவனங்கள் பங்கேற்றன. இந்நிறுவனங்களில் இருந்து தலைமை அதிகாரிகள் 100 பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் புதுச்சேரி மாநிலத்தில் தொழில் தொடங்க ஏதுவான சூழ்நிலைகள், இதிலுள்ள இடற்பாடுகள், அவற்றை கலைவது எப்படி என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்கள், அதன் செயல் அதிகாரிகள் ஆர்வமாக இருக்கின்றார்கள்.
தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என அவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். உடனடியாக ஒப்புதல் கிடைக்க வேண்டும். மின்சாரம், நல்ல தண்ணீர், தொழிற்சாலைகளுக்கு தேவையான இடங்களை உடனடியாக தேர்வு செய்து கொடுக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு விதமான பிரச்சினைகளை அரசிடம் எடுத்துக் கூறியுள்ளனர். அதனை அரசு தீர்த்துக்கொடுக்கும் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். தொழில் முனைவோருக்கு இருக்கின்ற பிரச்சினைகளை உடனடியாக தீர்த்துக் கொடுக்கவே அரசு இருக்கிறது.
புதுச்சேரியில் இருக்கின்ற தொழிற்சாலைகள் நல்ல முறையில் செயல்பட மீண்டும் தேவையான உதவிகளை செய்து, மேலும், திறனுற செயல்படுவதற்கான வழிவகைகளை செய்து கொடுக்க வேண்டும். புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் அரசின் நோக்கம். புதிய தொழிற்சாலைகள் உருவாகும்போது இங்குள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க முடியும். மாநிலத்தின் பொருளாதாரம் மேம்படுவதற்கும் ஏதுவாக இருக்கும்.
எனவே, பழைய தொழிற்சாலைகளை பாதுகாப்பது மட்டுமின்றி, புதிய தொழிற்சாலைகளை கொண்டுவதற்கான முயற்சியை எங்கள் அரசு எடுத்துள்ளது. வெகு விரைவில் தொழில் நிறுவனங்களின் குறைபாடுகள், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து, புதுவையில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழ்நிலையை முதல்வர் ரங்கசாமி தலைமையில் உள்ள அரசு செயல்படுத்தும். பிரதமர் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவோம்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT