Published : 03 Jun 2022 09:59 PM
Last Updated : 03 Jun 2022 09:59 PM

மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை அமைக்க திட்டம்

படம்: ஆர்.அசோக்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாட்டிற்கு வரும் பக்தர்களின் அவசர சிகிச்சைக்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது.

மதுரை மீனாட்சிம்மன் கோயில் உலக புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாகவும், சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் என 50,000 பேர் தினமும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகிறார்கள். சாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய இருக்கிறது. அப்படி வரிசையில் நிற்கும் பக்தர்கள் வயதானவர்கள், பெண்கள், நோயாளியாக இருக்கும்பட்சத்தில் திடீரென்று மயக்கமடைந்து விடுகின்றனர். அவர்களில் சிலர் அவ்வப்போது திடீர் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இறக்கும் சூழலும் ஏற்படுகிறது. இதனால், மீனாட்சியம்மன் கோயிலில் தற்போது ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி நிறுத்தப்பட்டிருக்கிறது.

பக்தர்களில் யாருக்காவது திடீரென்று உடல்நல குறைவு ஏற்படும்பட்சத்தில் அவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி அருகில் உள்ள அரசு மருத்துமவனைக்கு அழைத்து செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் கோயிலுக்கு வருவதற்கு பேட்டரி வாகனங்கள் உள்ளன. ஆனாலும், பக்தர்களுக்கு ‘திடீர்’ உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் நேரிடும் வாய்ப்புள்ளது. அதனால், மீனாட்சிம்மன் கோயிலில் தற்போது இந்து அறநிலைத் துறை சார்பில் மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது.

இதுகுறித்து மீனாட்சியம்மன் கோயில் அதிகாரி ஒருவர் கூறும்போது, "கோயிலுக்கு வரும் பக்தர்களின் ஆரோக்கியத்தை பேணும் வகையில் தற்போது மருத்துவமனை அமைக்க திட்டம் அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. 2 மருத்துவர்கள், 2 செவிலியர்கள், 2 மருத்துவப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த மருத்துவமனையில் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர். உடல் நலகுறைவு ஏற்படும் பக்தர்களுக்கு இந்த மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை வழங்கப்படும்.

அதன்பிறகு உயர் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில் அருகில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள். இதற்காக படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இந்த மருத்துவமனை தற்காலிகமாக கோயிலில் உள்ள கட்டிடம் ஒன்றில் செயல்படவுள்ளது. அதன்பிறகு நிரந்தர கட்டிடத்தில் செயல்படவுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x