Published : 03 Jun 2022 04:34 PM
Last Updated : 03 Jun 2022 04:34 PM
உதகை: கடந்த மாதத்தில் மட்டும் நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் இருந்து 33 டன் காலி மது பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 76 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்குகின்றன. இதில் பல மதுக்கடைகள் கிராமப்புறங்கள், நீர்நிலைகள்,வனப்பகுதிகளையொட்டி அமைந்துள்ளன. இதனால், மது அருந்தியபிறகு காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் வனப்பகுதிமற்றும் நீர் நிலைகளில் வீசப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும்,யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கும் அபாயத்தை விளைவிக்கிறது.
இதைத்தொடர்ந்து, வனப்பகுதியில் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், கடந்த 15-ம் தேதி முதல்மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 நிர்ணயித்து, காலி மதுபாட்டில்கள் மீண்டும் டாஸ்மாக்கடைகளால் பெறப்படுகின்றன.
இந்நிலையில், இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர்வனப்பகுதியில் வீசப்பட்ட மதுபாட்டில்களை சேகரிக்க டாஸ்மாக்நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, கடந்த மாதம் வனப்பகுதி, நீர்நிலையோரம், சுற்றுலா பிரதேசங்கள் மற்றும் சாலையோரம் கிடந்த 33 டன் காலி மதுபாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கோவை மண்டலடாஸ்மாக் மேலாளர் கோவிந்தராஜுலு கூறும்போது, "தற்போது மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாகநிர்ணயித்து, அந்த பாட்டில்களை மீண்டும் கடைகளில் திரும்ப வழங்கும் நடைமுறை சிறப்பாகசெயல்பட்டு வருகிறது. இதன்மூலமாக 80 சதவீத பாட்டில்கள்மீண்டும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு திரும்பிவிடுகின்றன. ஒரு சிலர் காலி மதுபாட்டில்களை சாலையில் வீசிவிட்டு சென்றால்கூட, டாஸ்மாக் கடைகளில் கொடுத்தால் ரூ.10 திரும்ப கிடைக்கும் என்பதால், அதைப் பார்க்கும் வேறு சிலர் காலி மது பாட்டில்களை எடுத்து டாஸ்மாக் கடைகளில் கொடுத்துவிடுகின்றனர்.
இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதிகளில் வீசப்பட்ட மதுபாட்டில்களை சேகரிக்க தனியார் மது உற்பத்தி நிறுவனங்களின் உதவியுடன், 11 குழுக்கள் அமைக்கப்பட்டன. கடந்த மாதத்தில் மட்டும் 33 டன் காலி மதுபாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆங்காங்கே வீசப்படும் மது பாட்டில்களை சேகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளும் காலி மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களை வனப்பகுதி மற்றும் சாலையோரம் வீசுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT