Last Updated : 03 Jun, 2022 06:49 AM

 

Published : 03 Jun 2022 06:49 AM
Last Updated : 03 Jun 2022 06:49 AM

நாமக்கல் மலைக்கோட்டையை அழகுபடுத்த வேண்டும்: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டை.

நாமக்கல்: புராண கால சிறப்பு மிக்க நாமக்கல் மலைக்கோட்டையை, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் நடுநாயகமாக 246 அடி உயரம் கொண்ட மலைக்கோட்டை அமைந்துள்ளது. மத்திய தொல்லியல் துறையினர் மலைக்கோட்டையை பராமரிப்பு செய்து வருகின்றனர். இந்த மலை உருவான விதம் குறித்து புராண வரலாறு உள்ளது. விஷ்ணுவுக்கு உகந்த தெய்வீக கல் என, அறியப்படும் சாலக்கிராமத்தை இவ்வழியாக அனுமன் எடுத்துச் செல்கிறார்.

அப்போது கமலாலய குளத்தில் நீராடுவதற்காக சாலக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு அனுமன் நீராடச் சென்றுள்ளார். நீராடிய பின்னர் சாலக்கிராமத்தை எடுக்க இயலவில்லை. இதனால் சாலக்கிராமத்தை இங்கேயே வைத்துவிட்டு ஆஞ்சநேயர் சுவாமியும் இங்கேயே தங்கி விடுகிறார் என்பது புராண கால வரலாறாகும்.

இதை மெய்பிக்கும் வகையில் கோட்டையில் நரசிம்மர் சன்னதி, ரங்கநாதர் சன்னதி மற்றும் இதன்நேர் எதிரே பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இம்மலையை நாமகிரி எனவும் அழைக்கப்படுகிறது. இதனால் இப்பகுதி நாமக்கல் என பெயர் பெற்றதாகவும் சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. இம்மலைக்கோட்டையின் மீது பெருமாள் கோயில் மற்றும் முஸ்லிம் மக்கள் வழிபாடு நடத்தும் தர்காவும் உள்ளது. இன்றளவும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் மதநல்லிணக்கத்தின் அடையாளமாகவும் இம்மலைக்கோட்டை விளங்கி வருகிறது.

நாமக்கல்லுக்கு சுற்றுலா வரும் பயணிகள் மலைக்கோட்டைக்கு செல்ல தவறுவதில்லை. அவர்கள், 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மலைக்கோட்டை சுவர்கள் மீது தங்களது பெயர் உள்ளிட்டவற்றை எழுதி, அதன் அழகை சிதைப்பதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மலைக்கோட்டையைச் சுற்றி மின் ஒளி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இது காண்போர் கண்களுக்கு விருந்து படைக்கும் விதமாக இருந்தது. ஆனால், கடந்த ஓராண்டுக்கு மேலாக மின் ஒளி அலங்காரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சுற்றுலா கலாச்சார ஆர்வலர் ஆர்.பிரணவக்குமார் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது:

நாமக்கல் மலையைச் சுற்றி குளங்கள் உள்ளன. மலையின் ஒருபுறம் உள்ள குளத்தில் மாலை வேளையில் மலையின் முழு நிழலும் விழுவது காண்போரை ரசிக்கச் செய்யும். மலையில் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை அதன் பொழிவு குன்றாமல் இன்றளவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. 16-ம் நூற்றாண்டில் சேந்தமங்கலம் பாளையக்காரரான ராமச்சந்திர நாயக்கரால், இக்கோட்டை கட்டப்பட்டதாகவும், மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா கட்டியதாகவும் இருவேறு கருத்துகள் உள்ளன.

திப்பு சுல்தான் காலத்தில், கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்துப் போரிட இக்கோட்டையை பயன்படுத்தியதாகவும், வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கு சான்றாக கோட்டையின ஒரு பகுதியில் ஆயுதக் கிடங்கு உள்ளது.

இவற்றைக் காணச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கோட்டை சுவர்களின் மீது தங்களது பெயர்களை எழுதுவது, படங்களை வரைவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். மேலும், மதுபானம் அருந்தி பாட்டில்களை வீசிச் செல்கின்றனர். இதனால், கோட்டையின் அழகு மாசுபடுவதுடன், கோட்டையும் சிதலமடைகிறது.

தொல்பொருள் ஆய்வுத் துறையினர் இதை கவனத்தில் கொண்டு, பணியாளரை நியமித்து கண்காணிக்க வேண்டும். மலையில் சுற்றுலாப் பயணிகள் அமரும் வகையில் இருக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

மலைக்கோட்டைக்கு செல்ல நேரக் கட்டுப்பாடு, அலங்கார மின் விளக்கு வசதி, கண்காணிப்பு கேமரா வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x