Published : 02 Jun 2022 05:25 PM
Last Updated : 02 Jun 2022 05:25 PM
மதுரை: பாரபட்சமாக செயல்படுவதாக புகார் மனு அளிக்கப்பட்ட நிலையில், கொட்டாரம் முதல் நிலை பேரூராட்சியில் ரூ.68 லட்சம் மதிப்புள்ள டெண்டர் அறிவிப்பாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குமரி மாவட்டம் மகாதானபுரம் தாமரைப்பூ தன்னார்வ பணியாளர் சங்க தலைவர் எஸ்.வனஜா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''கொட்டாரம் பேரூராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக குப்பைகளை சேகரிக்கும் பணியை எங்கள் சுய உதவிக் குழு மேற்கொண்டு வருகிறது. இப்பணியை நான் உட்பட 20 பேர் மேற்கொண்டு வருகிறோம். தினமும் ஒருவருக்கு ரூ.400 ஊதியமாக வழங்கப்படும். எங்கள் சங்கத்துக்கு வழங்கப்பட்ட உரிமம் 31.3.2023 வரை உள்ளது.
இந்நிலையில், பேரூராட்சித் தலைவரின் தூண்டுதல் பேரில் கொட்டாரம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை, குப்பை சேகரிக்கும் வாகனங்களை இயக்குதல் மற்றும் தெரு விளக்கு பராமரித்தல் பணிக்காக ரூ.68 லட்சம் மதிப்பில் டெண்டர் அறிவிப்பாணையை பேரூராட்சி செயல் அலுவலர் வெளியிட்டார்.
இந்த அறிவிப்பாணையில் டெண்டரில் எங்கள் சங்கம் பங்கேற்கக்கூடாது என்பதற்காக பல்வேறு நிபந்தனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. வெளிப்படையான டெண்டர் சட்டப்படி அறிவிப்பாணை வெளியிட்டு விண்ணப்பிக்க 15 நாள் அவகாசம் தர வேண்டும். அவ்வாறு அவகாசம் தரப்படவில்லை. எனவே, டெண்டர் அறிவிப்பாணையை ரத்து செய்து, குப்பை சேகரிக்கும் பணியை தொடர்ந்து எங்கள் சங்கத்தினர் மேற்கொள்ள அனுமதிக்க உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.பி.கிருஷ்ணதாஸ் வாதிட்டார்.
பின்னர், வெளிப்படையான டெண்டர் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதால் கொ்ட்டாரம் பேரூராட்சி செயல் அலுவலர் மே 16-ல் வெளியி்ட்ட டெண்டர் அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது. சட்ட விதிகளை பின்பற்றி புதிய டெண்டர் அறிவிப்பாணை வெளியிட அனுமதி வழங்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT