Published : 02 Jun 2022 03:23 PM
Last Updated : 02 Jun 2022 03:23 PM

வழக்குகளை துரிதமாக முடிக்க நீதிமன்றம், வழக்கறிஞர் மன்றம் இணைந்து செயல்பட வேண்டும்: தலைமை நீதிபதி

உதகை: வழக்கு விசாரணைகளை துரிதமாக முடிக்க நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர் மன்றம் இணைந்து செயல்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகை பிங்கர்போஸ்ட் அடுத்த காக்காதோப்பு பகுதியில் சுமார் 3½ ஏக்கர் பரப்பளவில் ரூ.37.79 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்த நீதிமன்ற வளாக திறப்பு விழா இன்று நடந்தது. உதகை பழங்குடியினர் பண்பாட்டு ஆய்வு மையத்தில் நடந்த விழாவில், மாவட்ட நீதிபதி முருகன் வரவேற்றார்.

விழாவில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்று பேசுகையில், ''மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. நீதியை காப்பது என லட்சியத்தோடு இந்த அரசு செயல்படுகிறது. நீதித்துறை சார்பில் எந்த கோரிக்கை வைத்தாலும் அதை முதல்வர் நிறைவேற்றி தருகிறார். சமூக நீதி காக்கப்பட வேண்டும். மேலும் பெண்களுக்கு சம நீதி வேண்டும். சொத்தில் பெண்களுக்கு சம உரிமையை கருணாநிதி பெற்று தந்தார். நீதித்துறைக்கும் அரசுக்கு சட்டத்துறை பாலம் இருக்கிறது. நீதித்துறை துரிதமாக செயல்பட்டால் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படும். அதிக நீதிமன்றங்கள் உருவாக்கப்படும். நீதித்துறை கேட்பதெல்லாம் கிடைக்கும்'' என்றார்.

வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் பேசும்போது, ''உதகை நீதிமன்ற வளாகத்துக்கு செல்ல சாலை வசதி விரைவில் ஏற்படுத்தப்படும். குன்னூர், கோத்தகிரி பகுதியில் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். குந்தா மின் வாரியத்துக்கு சொந்தமான கட்டிடத்தை பெற்ற நீதிமன்றம் அமைக்க மின்வாரிய அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

நீதிமன்ற வளாகத்தை திறந்து வைத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பேசுகையில், ''சாமானிய மனிதனின் நீதிக்கான கடைசி ஆதாரம் நீதித்துறையாகும். நீதியை தாமப்படுத்துவது நீதியை மறுப்பதற்கு சமம். ஆனால் நீதிபதிகள் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்புகள் போதுமானதாக இல்லாத நிலையில், வழக்கு எப்போது முடியும் என்பது தெரியவில்லை. நீதிபதிகள் பற்றாக்குறை காரணமாக நீதிபதிகளின் வேலை பளு அதிகரிக்கிறது. இதனால், வழக்குகளின் விசாரணை தாமதமாகின்றன.

இதனால், போதுமான கட்டமைப்புகள் மற்றும் நீதிபதிகள் நியமனம் முக்கியமாகும். தமிழகத்தில் உள்கட்டமைப்புகளை மாநில அரசு ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான நீதிமன்றங்கள் சொந்த கட்டிடங்களில் இயங்குகின்றன. சென்னையின் மையப்பகுதியில் நீதிமன்ற வளாகம் அமைக்க நிலம் ஒதுக்கியுள்ளது. 116 நீதிமன்றங்கள் கொண்ட சிவில் நீதிமன்றம் இப்பகுதியில் ஏற்படுத்தப்படவுள்ளது. இதற்கு அரசு துரிதமாக செயல்பட்டு நிலத்தை ஒதுக்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 92 சிவில் வழக்குகள் மற்றும் 33 கிரிமினல் வழக்குகள் 20 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளன. இதே போல 3 வழக்குகள் 25 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்த தாமதத்தை நியாயப்படுத்த கூடாது. நிலுவை வழக்குகளின் விசாரணை விரைவாக முடிக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு மேல் நிலுவையில் எந்த வழக்கும் இல்லை என்ற நிலையை எட்ட வேண்டும். இதற்கு வழக்குறிஞர்கள் ஒத்துழைக்க வேண்டும். நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர் மன்றம் இணைந்து செயல்பட வேண்டும். அதன் மூலம் வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்தலாம்.

இளம் வழக்கறிஞர்கள் தங்கள் பணி முடிந்த பின்னர் வீட்டுக்கோ, அலுவலகத்துக்கோ சென்று விடுகின்றனர். அப்படி அல்லாமல் நீதிமன்ற நடவடிக்கைகளை அவர்கள் கவனிக்க வேண்டும். மூத்த வழக்கறிஞர்கள் வாதிடுவது, அதற்கு நீதிபதிகளின் எதிர்வினை, வழக்கில் நீதிபதிகளின் மனநிலை ஆகியவற்றை கூர்ந்து கவனித்தால், எதிர்காலத்தில் தங்களது வழக்கு விசாரணைக்கு அவை பெரும் உதவியாக இருக்கும். மேலும் நீலகிரி மாவட்டம் உதகையில் இந்திய தண்டனை சட்டத்தை லார்டு மெக்கலே வரையறுத்துள்ளார். இதனால், நீலகிரி மாவட்டம் சட்டத்தை வரையறுப்பதிலும் பங்கு வகித்துள்ளது. மெக்கலே மூன்று மாதங்கள் இங்கேயே தங்கி இப்பணியை செய்துள்ளார். இதற்கு நீலகிரியின் இயற்கை மற்றும் காலநிலையும் மற்றோரு காரணமாகும். நீலகிரி மாவட்டத்தில் வனத்துறை பெரும் பங்கு வகிக்கிறது. மாவட்டத்தில் சுற்றுச்சூழல் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது'' என்றார்.

விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஸ்குமார், ஷேசசாயி, ஆனந்தி, பவானி சுப்பராயன், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், உதகை எம்எல்ஏ ஆர்.கணேஷ், கூடலூர் எம்எல்ஏ பொன்.ஜெயசீலன், நீலகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சந்திரபோஸ், மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். மகளிர் நீதிபதி நாராயணன் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x