Published : 02 Jun 2022 01:21 PM
Last Updated : 02 Jun 2022 01:21 PM

சமத்துவம், தேர்வு முறை சீர்திருத்தம்... - மாநிலக் கல்விக் கொள்கைக்கு 10 வழிகாட்டுதல்கள் - அரசாணை வெளியீடு

சென்னை: அனைவருக்கும் உயர் கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கை தயார் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

திமுக கடந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, 2021-22-ம் ஆண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் புதிய கல்விக் கொள்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் உறுப்பினர்களாக சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எல்.ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமானுஜம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், யூனிசெஃபின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.பாலு, அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாநிலக் கல்வி கொள்கை தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் பதிய கல்விக் கொள்கை எதன் அடிப்படையில் தயார் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் விவரம்:

  • தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து கல்விக் கொள்கையை வடிவமைக்க வேண்டும்
  • உலகளாவிய கல்வி, வளரிளம் பருவத்தினருக்கான கல்வி, தொழில்நுட்பங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு கல்விக் கொள்கையை வடிவமைக்க வேண்டும்
  • ஆசிரியர்கள், உதவி பேராசிரியர் நியமனத்தில் செய்ய வேண்டிய சீரமைப்புகளை பரிந்துரை செய்ய வேண்டும்.
  • உயர் கல்வி ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை அளிக்க வேண்டும்
  • வேலைவாய்ப்புக்கேற்ற பாடத்திட்டம் இருக்க வேண்டும்
  • சமத்துவமான கல்வி அளிக்க வேண்டும்
  • தேர்வு முறைகளில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும்
  • பள்ளிப்படிப்பை முடிப்போர் அனைவரும் உயர் கல்வியை தொடரும் வகையில் கல்விக் கொள்கை இருக்க வேண்டும்

இவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த மாநில கல்விக் கொள்கை தயார் செய்ய வேண்டும் என்று இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த குழுவானது ஓராண்டில் மாநிலக் கல்விக் கொள்கையை தயார் செய்து இறுதி அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x