Published : 02 May 2016 05:33 PM
Last Updated : 02 May 2016 05:33 PM
தேமுதிக-தமாகா-மக்கள் நலக்கூட்டணிக்கு கணிசமான ஆதரவு உள்ள நிலையில் வெற்றி வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என கணிக்க முடியாமல் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் கலக்க மடைந்துள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக, திமுக இடையே நேரடி போட்டி வலுத்துள்ளது. நாகர்கோவில் தொகுதியில் பாஜக, அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. மற்ற 4 தொகுதிகளிலும் மக்கள் நலக்கூட்டணி முக்கிய கட்சிகளை திணறடித்து வருகிறது.
குளச்சல்
குளச்சல் தொகுதியில் நடப்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ், அதிமுக சார்பில் பச்சைமால் எம்.எல்.ஏ. ஆகியோர் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகின்றனர். பாஜகவின் குமரி ரமேஷ் குளச்சல் துறைமுகத் திட்டம் தனக்கு கைகொடுக்கும் என நம்புகிறார். அதேநேரம் இவர்கள் அனைவருக்குமே கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது தேமுதிக-தமாகா- மக்கள் நலக்கூட்டணி. மதிமுக வேட்பாளர் சம்பத் சந்திரா குளச்சல் தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக பல தேர்தல்களை சந்தித்தவர். வெற்றி இலக்கை குறி வைத்து தற்போது ஆதரவு திரட்டி வருகிறார். இவரால் தங்களின் ஆதரவு வாக்குகள் சிதறடிக்கப்படுமோ? என்ற பதற்றம் பச்சைமால், பிரின்ஸ் போன்றோருக்கு ஏற்பட்டுள்ளது.
விளவங்கோடு
விளவங்கோடு தொகுதியில் விஜயதரணி எம்.எல்.ஏ. மீண்டும் போட்டியிடும் நிலையில் உட்கட்சி அதிருப்தி அவருக்கு சவாலாக விளங்குகிறது. பாஜக வேட்பாளர் தர்மராஜ் கடும் போட்டியை கொடுத்து வருகிறார். அதிமுக வேட்பாளர் நாஞ்சில் டோம்னிக்குக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதே நேரம் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் வேட்பாளர் செல்லச்சாமிக்கும் கணிசமான ஆதரவு நிலை காணப்படுகிறது. பிரதான கட்சிகளின் வாக்குகளை இக்கூட்டணி அதிகம் பிரிக்கும் என்றே கூறப்படுகிறது.
பத்மநாபபுரம்
பத்மநாபபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் மனோ தங்கராஜ், திமுக-காங்கிரஸ் வாக்கு வங்கியை பிரதானமாக நம்பியுள்ளார்.
தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமான அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பிரசாத், இம்முறை தனக்கே வெற்றி என, நம்பிக்கையில் பணியாற்றி வருகிறார். ஆனாலும் தேமுதிக வேட்பாளர் ஜெகநாதன் பெரும் போட்டியை மற்ற கட்சியினருக்கு கொடுத்து வருகிறார். ஏற்கெனவே இவர் இத்தொகுதியில் பரவலாக மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து நடத்திய போராட்டங்கள் அவருக்கு பிளஸ் பாயின்ட்டாக அமைந்துள்ளது.
கிள்ளியூர்
முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ், பாஜக அதிக வாக்குகள் பெற்ற கிள்ளியூர் தொகுதியில் தமாகா சார்பில் போட்டியிடும் குமாரதாஸ் தற்போது கணிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தமாகாவுக்கு ஒதுக்கப்பட்ட ஒரே தொகுதி இது என்பதால் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சியினர் உள்ளனர். தமாகாவின் வேகமான தேர்தல் பணியால் கிள்ளியூரில் பாஜக., காங்கிரஸ், அதிமுக கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT