Published : 02 Jun 2022 05:05 AM
Last Updated : 02 Jun 2022 05:05 AM

இரண்டரை மாதங்களுக்குப் பின் தினசரி கரோனா பாதிப்பு 100-ஐ கடந்தது - தமிழகத்தில் புதிதாக 139 பேருக்கு தொற்று

சென்னை: தமிழகத்தில் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு தினசரி கரோனா பாதிப்பு 100-ஐக் கடந்துள்ளது. நேற்று புதிதாக 139 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 96, பெண்கள் 43 என மொத்தம் 139 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 59, செங்கல்பட்டில் 58 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 55,613 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 16,959 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 52 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்.

சிகிச்சையில் 629 பேர்

தமிழகம் முழுவதும் 629 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 9,068 பேர் இறந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் கரோனா தொற்று பாதிப்பு 98 ஆகவும், சென்னையில் 44 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் அச்சம்

தமிழகத்தில் கடந்த மார்ச் 12-ம்தேதி தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 105 ஆக இருந்தது. இரண்டரை மாதங்களுக்குப்பின் தினசரி தொற்று பாதிப்பு நேற்று 100-ஐக் கடந்து 139 ஆக பதிவாகியுள்ளது. நேற்று முன்தினத்தைவிட நேற்று தொற்று பாதிப்பு எண்ணிக்கை 41 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் 4-ம் தேதி தினசரி தொற்று பாதிப்பு 21 ஆக பதிவானது. அதன்பின் படிப்படியாக, தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் குழு குழுவாக தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், மருத்துவ நிபுணர்கள் கணித்ததைப் போல், ஜூன் மாதத்தில் தொற்றின் 4-வது அலை தொடங்கிவிடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x