Published : 01 Jun 2022 10:05 PM
Last Updated : 01 Jun 2022 10:05 PM

ரூ.738 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரம்: இம்முறை வெள்ள பாதிப்பின்றி தப்புமா சென்னை?

சென்னை: பருவமழை தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி உட்பட பல மழைநீர் வடிகால் பணிகளை ஆரம்பித்துவிட்டது. இதன்படி ரூ.738 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் 2071 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் உள்ளன. இந்த மழை நீர் வடிகால் முறையாக தூர்வாரி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டால்தான் மழை காலங்களில் தண்ணீர் எந்த தடையும் இன்றி செல்ல முடியும். ஆனால், மழைநீர் வடிகால்களை முறையாக தூர்வராத காரணத்தால்தான் கடந்த ஆண்டுகளில் வெள்ளம் ஏற்பட்டதாக பொதுமக்கள், நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழையை முன்னிட்டு மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த ஆண்டு 3 மாதங்களுக்கு முன்பே மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு அறிக்கையின் அடிப்படையில் 2021-ம் ஆண்டு மழைநீர் தேங்கிய இடங்களில் ரூ.186 கோடி மதிப்பீட்டில் 45.23 கி.மீ நீளத்திற்கு சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

10 தொகுதிகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தப் பணிகளில் சி.வி.ராமன் சாலை, டிடிகே சாலை, சித்தரஞ்சன் சாலை, அசோக் நகர் 16,17,18 அவின்யூ, ஆற்காடு சாலை, பசுவுல்லா சாலை, ஜி.என்.செட்டி சாலை உள்ளிட்ட இடங்களில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

உலக வங்கி நிதி உதவியில் சேதமடைந்த மழைநீர் வடிகால் சீரமைப்பு திட்டத்தின் கீழ் 40.92 கி.மீ நீளத்திற்கு ரூ.119.93 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. 43 தொகுதிகளாக நடைபெறும் இந்தப் பணிகளில் தண்டையார் பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், ஆலந்தூர உள்ளிட்ட மண்டலங்களிலும் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

இதைத் தவிர்த்து மூலதன நிதியில் இருந்து ரூ.7.40 கோடி மதிப்பீட்டில், 2.05 கி,மீ நீளத்திற்கும், உள் கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.26.28 கோடி மதிப்பீட்டில் 9.80 கி.மீ நீளத்திற்கும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதைப்போன்று சென்னை வெள்ள பாதிப்புகளை தடுக்க அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு அறிக்கையின் அடிப்படையில் 2021-ம் ஆண்டு மழைநீர் தேங்கிய இடங்களில் அதிக சக்தி வாய்ந்த பம்புகளை கொண்டு மழைநீரை வெளியேற்றிய இடங்களில் 107 கி.மீ நீளத்திற்கு 291.13 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

மேலும், சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் 20.15 கி.மீ நீளத்திற்கு ரூ.70 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, ஆலந்தூர், பாந்தியான் சாலை, புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கப்படவுள்ளது.

தற்போது வரை சென்னையில் ரூ.338 கோடி செலவில் ரூ.97.98 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.361 கோடி மதிப்பீட்டில் 177 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. மேலும் தூர்வாரும் பணிகள் ரூ.39.27 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இவ்வாறு பருவமழையின் 3 மாதங்களுக்கு முன்பே பணிகளை தொடங்கியுள்ளது சென்னை மாநகராட்சியின் இந்தப் பணிகள் எந்த அளவுக்கு பலன் அளிக்கும் என்பது பருவமழையின்போதுதான் தெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x