Published : 01 Jun 2022 09:42 PM
Last Updated : 01 Jun 2022 09:42 PM

“நீங்கள் வளைந்து, நெளியலாம்... ஆனால், எங்களிடம் சமரசத்திற்கு இடமில்லை” - ராம்குமாருக்கு முத்தரசன் பதில்

இரா.முத்தரசன் | கோப்புப் படம்.

சென்னை: வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதில் சமரசத்திற்கு இடமில்லை என்று ராம்குமாருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், பிரதமர் நரேந்திர மோடி குறித்து எமது விமர்சனத்தை தரம் குறைந்ததாக மதிப்பிட்டு, இனிமேல் எமது தந்தையின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று ஊடகங்கள் வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராம்குமாருக்கு சிவாஜி கணேசன் உயிரியல் வழி தந்தையாவார். ஆனால், என் போன்ற கோடிக்கணக்கானவர்கள் உள்ளத்தில் இன்றும் வாழ்ந்து வரும் 'நடிப்புலகின் மேதையாவார்'. எண்ணிலடங்கா பாத்திரங்களில் வாழ்ந்து வரும் அவரது நடிப்புத்திறன் எதிர்வரும் தலைமுறையும் கற்றறிய வேண்டிய கலைத்துறையின் இலக்கணமாகும் என்பதை எவரும் மறுக்க முடியாது.

எட்டாண்டு கால ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு வரும் பிரதமர் மோடியின் உண்மை கலவாத சுத்தமான பொய் மூட்டை வியாபாரத்துக்கு ராம்குமாரும் கூட்டாளியாகி இருப்பதை அவரது அறிக்கை வெளிப்படுத்துகிறது.

நடிகர் திலகத்தின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழ்ந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கு வகுப்புவாத சக்திகள் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட நிலையில் ''கருப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.15 லட்சம் வைப்பு நிதியாக செலுத்துவோம்'' என்று உணர்ச்சி பொங்க உறுதியளித்தார்களா? இல்லையா?

விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதாகவும், ஆண்டுக்கு 2 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதாகவும் மேடைக்கு, மேடை முழங்கினார்களா? இல்லையா?

கூட்டாட்சி கோட்பாடுகளை தகர்த்து, மாநில உரிமைகளைப் பறித்து, தனிநபரை மையப்படுத்திய, சர்வாதிகார வழியில், பாசிச ஆட்சிமுறைக்கு நாட்டை நகர்த்தி செல்வதை மறுக்க முடியுமா?

இவை குறித்து சிந்தனை தெளிவு ஏற்படாமல் தடுக்க ராம்குமார் போன்றவர்களை பாஜக களம் இறக்கி வருகிறது. மாநில உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் சாரதியாக முன்னின்று செயல்படும், திமுகவை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது என்பதை 'அரைகுறை ஞானம்' கொண்டவர்களும் உள்ளங்கை நெல்லிக்கனியாக அறிந்து கொள்ளும் போது 'பேரறிஞர்' ராம்குமார் அறியாமையில் இருப்பது வரலாற்று துயரம்தான்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராம்குமாருக்கு உயிரியல் தநதையாவார் மறுக்கவில்லை. ஆனால், அந்த மாமனிதன் வாழ்ந்த வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியோடு உணர்வில் கலந்து உறவில் இருந்து வந்தார்.

மயிலாடுதுறையில் நாடகம் நடத்தி நிதி திரட்டி கொடுத்ததையும், காவிரி நதிநீர் பிரச்சனைக்காக மனித சங்கிலி போராட்டத்தை கட்சி முன்னெடுத்த போது ஆக்கம் கொடுத்து ஊக்கப்படுத்தியதையும் என்றென்றும் நினைவுகூர்ந்து வருகிறது.

ஒன்றிய அரசின் அரசியல் செல்வாக்கின் அழுத்தங்களுக்கு ராம்குமார் வளைந்து, நெளியலாம். வகுப்புவாத சக்திகளை எதிர்த்து போராடும் போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்பதை ராம்குமாருக்கும் அவர் மூலம் அறிக்கை வெளியிட்ட சக்திகளும் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று முத்தரசன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x