Published : 01 Jun 2022 08:38 PM
Last Updated : 01 Jun 2022 08:38 PM

“மதுரை செஞ்சட்டைப் பேரணியில் இந்துக் கடவுள்கள் அவமதிப்பு; நடவடிக்கை எடுக்காதது ஏன்?” - தமிழக பாஜக

சென்னை: "மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் சமூக விரோத தீய சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க அச்சப்படுகிறதா அல்லது வெண்சாமரம் வீசுகிறதா திமுக அரசு என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும்" என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "கடந்த 29-ம் தேதி மதுரையில் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் திராவிடர் கழகம், இரு கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் 'செஞ்சட்டை பேரணி' என்ற பெயரில் இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதோடு, இந்து கடவுள்களை ஆபாசமாக சித்தரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

'பெண்களை கற்பழித்த கண்ணன் ஒரு கடவுளா' என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி இந்து கடவுள்களை இழிவுபடுத்தியுள்ளது தமிழக காவல்துறைக்கு தெரியாதா? மதுரை காவல்துறை ஆணையரின் காதுகளில் விழவில்லையா? காணொளி இணைப்புகள் கண்களுக்கு தெரியவில்லையா?

திமுக அரசு இந்து விரோத அரசுதான் என்பதை மதுரையில் நடந்த செஞ்சட்டை பேரணி என்ற பெயரில் அனுமதிக்கப்பட்ட இந்து விரோத செயல்கள் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மதுரை காவல்துறை இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஒட்டுமொத்த காவல்துறைக்கே களங்கத்தை உருவாக்கும் செயல்.

இந்தப் பேரணியை தொடர்ந்து நடைபெற்றக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்து மதத்தை இழிவாக பேசியுள்ளதோடு, சில சாதிகள் குறித்தும் அவதூறாக பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட் சு.வெங்கடேசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோரின் வன்மத்தை விதைக்கும், மத நல்லிணத்துக்கு எதிரான பேச்சுக்கு எதிராக உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

இல்லையேல், முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அரசு இந்துக்களுக்கு எதிரானதுதான் என்றும், தன் அரசு இந்து கடவுள்களுக்கு எதிரானதுதான் என்பதையும் ஒப்புக் கொள்வதோடு, இந்து அறநிலையத் துறையை விட்டு வெளியேற உத்தரவிட வேண்டும். மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் சமூக விரோத தீய சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க அச்சப்படுகிறதா அல்லது வெண்சாமரம் வீசுகிறதா திமுக அரசு என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும்.

இந்து கடவுள்களை அவமதிக்கும் திராவிடர் கழகம் உள்ளிட்ட நாத்திக சமூக விரோத அமைப்புகளை தடை செய்ய வேண்டும். இனியும் இந்து மதத்தின் மீதும், இந்து கடவுள்களின் மீதும் இதுபோன்ற அநாகரிக, தரம் தாழ்ந்த, சட்டவிரோத செயல்களை தமிழக அரசு அனுமதிக்குமேயானால், அமைதியை நிலைநாட்ட, மதநல்லிணக்கத்தை பேணி காக்க சட்ட விரோத தீய சக்திகளை, மக்களின் துணைகொண்டு பாஜகவே இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டியிருக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x