Published : 01 Jun 2022 05:18 PM
Last Updated : 01 Jun 2022 05:18 PM
ராமேசுவரம்: இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் கொழும்பு மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 3 பேர் புதன்கிழமை அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் பெட்ரோல், சமையல் எரிவாயு, உணவுப் பொருட்கள் என அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அங்கு ஆளும் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றாலும் மக்களிடையே போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனால், இலங்கையில் இருந்து கடந்த மார்ச் 22-ல் இருந்து மே மாதம் 2-ம் தேதி வரையிலும் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 80 இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கையில் உள்ள கொழும்பு தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த ஜெஸிந்தமேரி (51), அவரது மகன் பிரவீன் சஞ்சய் (10), மன்னார் மாவட்டம் சிலாவத்துறையைச் சேர்ந்த அனிஸ்டன் (31) ஆகிய மூவர் தலைமன்னாரிலிருந்து செவ்வாய்கிழமை இரவு புறப்பட்டு தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோவில் பகுதிக்கு புதன்கிழமை அதிகாலை வந்தடைந்தனர்.
தகவலறிந்து தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் பகுதிக்குச் சென்ற மெரைன் போலீசார் அகதிகளாக வந்த 3 இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருவதால் அங்கு வாழ வழியின்றி தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.
விசாரணைக்குப் பின்னர் 3 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், தமிழகத்திற்கு வந்த இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment