Published : 01 Jun 2022 03:55 PM
Last Updated : 01 Jun 2022 03:55 PM
சென்னை: திருவண்ணாமலையில் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வேளச்சேரியைச் சேர்ந்த ஜி.கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருவண்ணாமலை கிரிவல பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கிய ஜீவா கல்வி அறக்கட்டளை, அருகில் உள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட உள்ளது.கிரிவல பாதையில் சிலை அமைப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவர். மேலும் கால்வாய் அமைந்துள்ள அப்பகுதியில், கட்டுமானம் மேற்கொண்டால் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. மேலும், குறிப்பிட்ட நிலத்தில் சிலை அமைக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.இந்த இடைக்கால தடையை நீக்க கோரி ஜீவா கல்வி அறக்கட்டளை சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் முகமது சபீக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஜீவா கல்வி அறக்கட்டளை மற்றும் தமிழக அரசுத் தரப்பில், சிலை அமைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த நிலம் பட்டா நிலம். அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தவர் யார் என்ற விவரங்களை கூறாமல், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் தாக்கல் செய்துள்ள இந்த பொது நல வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிடப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் குறிப்பிட்ட அந்த நிலம் பட்டா நிலம் எனக் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பிரதான வழக்கு மற்றும் தடை நீக்க கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...