Published : 01 Jun 2022 11:22 AM
Last Updated : 01 Jun 2022 11:22 AM
சென்னை: சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று காரணமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவருகிறது. ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த அன்றாட கரோனோ பாதிப்பு தற்போது 100 ஆக பதிவாகி வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் மற்றும் வார இறுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், " பொதுமக்கள் கூடக்கூடிய பொது இடங்களில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதை அனைத்து மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். முதல் இரண்டு மற்றும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தாதவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தொழில் நிறுவனங்களில் அரசின் நிலையான வழிகாட்டுதல்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்
பரிசோதனைக்கு ஏற்ப தொற்று உறுதியானவர்கள் சதவீதம் 5 சதவீதமாக உயரும் பட்சத்தில் பரிசோதனை எண்ணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். மருத்துவ கட்டமைப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வருகின்ற 12 ஆம் தேதி நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசியை செலுத்த தவறியவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
அரசு சார்பில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள கரோனோ வழிகாட்டுதல்களை முறையாக மாவட்ட நிர்வாகம் கண்காணித்து தொற்று பரவலை தடுக்க வேண்டும்" என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT