Last Updated : 01 Jun, 2022 09:13 AM

12  

Published : 01 Jun 2022 09:13 AM
Last Updated : 01 Jun 2022 09:13 AM

'பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பக்குவம் கிடையாது' - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கோவை: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பக்குவம் கிடையாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

கோவை நவ இந்தியா பகுதியில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று (மே 31) தலைமையில் நடைபெற்றது.

இதில், மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் தீர்மானங்களை வாசித்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் பையா ஆர்.கிருஷ்ணன், சிஆர்.இராமச்சந்திரன், மருதமலை சேனாதிபதி, டாக்டர் வரதராஜன் ஆகியோர் முன்னிலையில், பகுதிகழக பீளமேடு 2 பொறுப்பாளர் மா.நாகராஜ் வரவேற்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி பேசும்போது, "தொழிலில் தமிழகத்தின் தலைநகராக கோவை விளங்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். விமான நிலைய விரிவாக்கத்துக்கு 3 மாதத்தில் நிலம் எடுக்கும் பணி நிறைவடையும். மக்களவை தேர்தலை கவனம் வைத்து தொண்டர்கள் செயல்படவேண்டும். உள்ளாட்சியில் பெற்ற வாக்குகளை விட கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் ஆளுக்கு ஒரு பூத் எடுத்திருந்தால் கோவையில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருப்போம். அணிகள் போட்டிப்போட்டு செயல்பட வேண்டும். கலைஞரின் பிறந்த நாளை மாவட்டம் முழுவதும் திருவிழா கோலமாக நடத்த வேண்டும். மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்க வேண்டும். மக்களுக்கு பயனுள்ள நிகழ்வாக நடைபெற வேண்டும்,"என்றார்.

செய்தியாளர்கள் சந்திப்பு: தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறும்போது," கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் 400 இடங்களில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் சென்று ஓராண்டு சாதனையை துண்டு பிரசுரமாக கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பத்து சட்டப்பேரவைத் தொகுதியிலும் திராவிட மாடல் பயிற்சி பயிலரங்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் சுங்கம் மற்றும் கவுண்டம்பாளையம் பாலங்கள் விரைவில் திறக்கப்படும். குடிநீர் தேவைகளை பொருத்த வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீர் கிடைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. தனியார் பேருந்துகளை ஒழுங்குபடுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தி சரி செய்யப்படும். தனியார் பேருந்துகளில் அதிவேகத்தை குறைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும். மருதமலையில் சிறுத்தை நடமாட்டத்தை பிடிக்க பணிகள் விரைவுபடுத்தபட்டுள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசினார். அண்ணாமலை பொய் சொல்வதற்காகவே பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறார். அண்ணாமலைக்கு புரிதலும் கிடையாது ,புரிந்துகொள்ளும் பக்குவமும் கிடையாது. பத்திரிக்கையாளர்கள் பக்கத்தையும் தொலைக்காட்சி நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்.

முதல்வர் மின்சார உற்பத்தி குறித்தும் ஒதுக்கீடு குறித்தும் பேசியுள்ளார். தமிழக வரிகள் வேறு மாநிலங்களுக்கு செல்கிறது. எங்கள் மீது தவறுகள் இருந்து சுட்டிக்காட்டினால் சரி செய்ய தயாராக உள்ளோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x