Published : 01 Jun 2022 04:59 AM
Last Updated : 01 Jun 2022 04:59 AM

ஓய்வூதியர்களின் வீட்டுக்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் பெறும் சேவை: தமிழக அரசு - அஞ்சல் துறை இடையே ஒப்பந்தம்

ஓய்வூதியர்களின் வீட்டுக்கே சென்று வாழ்நாள் சான்றிதழை பெறுவதற்கான சேவை தொடர்பாக தமிழக அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.

சென்னை: அஞ்சல்துறை மூலம் ஓய்வூதியர்கள் இருப்பிடத்துக்கே சென்று வாழ்நாள் சான்றிதழை பெறுவதற்கான சேவை தொடர்பாக தமிழக அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து தமிழக அரசின் நிதித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாநில அரசின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள், தங்கள் வாழ்நாள் சான்றிதழை ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சமர்ப்பிக்கின்றனர். தற்போது ​​ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் விருப்ப அடிப்படையில், ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் நேரடியாகச் சென்று பதிவு செய்தல், தபால் மூலம் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்தல் மற்றும் மின்னணு விரல் ரேகை சாதனத்தை பயன்படுத்தி ‘ஜீவன் பிரமான்’ இணையம் மூலம் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தல் ஆகியவற்றில் ஏதேனும் ஒருமுறையில் வாழ்நாள் சான்றிதழை நேர்காணலில் சமர்ப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை நடக்கும் நேர்காணலில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரின் வயதை கருத்தில்கொண்டும், அவர்கள் நேரில் வருவதில் ஏற்படும் இடர்பாடுகளைத் தவிர்க்கவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

எனவே, இந்தியா போஸ்ட்பேமென்ட்ஸ் வங்கி மூலம் ஓய்வூதியர்களின் இருப்பிடத்துக்கே சென்று ‘ஜீவன் பிரமான்’ இணையத்தின் வழியாக மின்னணு வாழ்நாள் சான்றிதழை பெறுவதற்கான சேவையை உள்ளடக்கிய 5 முறைகளிலான வருடாந்திர நேர்காணலை நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஒரு மின்னணு வாழ்நாள் சான்றிதழுக்கு ரூ.70 என்ற கட்டணத்தில் ஓய்வூதியர்களின் இருப்பிடத்துக்கே சென்று சேவைகளை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் தமிழக அரசு - இந்தியா போஸ்ட்பேமென்ட்ஸ் வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந் நிகழ்வில், நிதித்துறை செயலர் நா.முருகானந்தம், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி நிறுவன தலைமை பொதுமேலாளர் குருசரண் ராய் பன்சால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x