Published : 01 Jun 2022 06:55 AM
Last Updated : 01 Jun 2022 06:55 AM
சென்னை: ராமேஸ்வரம் அருகே மீனவப் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக, வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மயிலாப்பூரில் தொழிலதிபர், மனைவியுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர்களிடமிருந்து 1,000 பவுன் தங்கம்மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக நேபாளத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மற்றொருவர் என 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல, மேலும் சில குற்ற வழக்குகளில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சிக்கினர்.
இவர்களில் சிலர் குற்றங்களை செய்துவிட்டு, தங்களது சொந்தமாநிலம் சென்று பதுங்கிவிடுகின்றனர். இதனால், அவர்களது முகவரியைக் கண்டறிந்து, அங்கு சென்று கைது செய்வதில் போலீஸாருக்கு காலதாமதம் ஏற்பட்டது.
வடமாநிலத்தவரின் முகவரி இருந்தால், யாரேனும் குற்றச் செயல்களில் ஈடுபடும்போது அவர்களைக் கண்டறிவது எளிது என போலீஸார் கருதுகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் தங்கியிருக்கும் வட மாநிலத்தவர் குறித்த விவரங்களைச் சேகரிக்க போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வெளிமாநில ஆட்களை வைத்து வீடு கட்டுவோர்,பொறியாளர்கள், கட்டிட ஒப்பந்ததாரர்கள், உணவக உரிமையாளர்கள், விடுதி நிர்வாகிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும், அந்தந்த எல்லைக்கு உட்பட்ட காவல்நிலையங்களில், தங்களிடம் பணிசெய்யும் வட மாநிலத்தவர் குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் எனவும் டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT