Published : 01 Jun 2022 06:50 AM
Last Updated : 01 Jun 2022 06:50 AM

பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைப் படிப்புகளுக்கு அங்கீகாரமில்லை: மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு எச்சரிக்கை

சென்னை: பல்கலைக்கழக மானியக்குழுவின்(யுஜிசி) செயலர் ரஜினீஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பு: சேலம் பெரியார் பல்கலை. தொலைநிலைப் படிப்புகளுக்கு அங்கீகாரம் பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்திவருவது தெரியவந்துள்ளது. இது விதிகளை மீறும் செயலாகும். பெரியார் பல்கலை.யில் உள்ள தொலைநிலைப் படிப்புகளுக்கு 2020 ஜூன் மாதம்வரையே அனுமதி தரப்பட்டுள்ளது. அதன்பின் எவ்வித படிப்புக்கும் பல்கலை. அங்கீகாரம் பெறவில்லை.

இதனால் பெரியார் பல்கலை. மீது உரிய நடவடிக்கை எடுக்க யுஜிசி முடிவெடுத்துள்ளது. அதன்படி அடுத்த 2 கல்வியாண்டுகள் பெரியார் பல்கலை.யின் தொலைநிலைக்கல்வி அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. மேலும்,2021-22-ம் கல்வி ஆண்டில் சமர்பித்த விண்ணப்பமும் பரிசீலிக்கப்படாது. மேலும், இந்த புகார்கள் குறித்து பல்கலை. மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில ஆளுநர் மற்றும் உயர்கல்வித்துறை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட உள்ளது.

இதற்கிடையே அங்கீகாரமற்ற தொலைநிலை, திறந்தநிலை படிப்புகள் செல்லாதவையாக கருதப்படும்.எனவே, பெரியார் பல்கலை.யில்உள்ள தொலைநிலைப் படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம். இதை மீறி சேர்க்கை பெறும் மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பில் சிக்கல்கள் ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

துணைவேந்தர் விளக்கம்

இது தொடர்பாக பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரியார் பல்கலை.யில் கடந்த டிசம்பர் மாதம் தேசிய தரமதிப்பீடு மற்றும் நிர்ணயக் குழு (நாக்) ஆய்வு மேற்கொண்டது.

இதில், ஆய்வுத் திட்டங்கள்,பாடத் திட்டம், மாணவர் நலன் சார்ந்தநடவடிக்கைகள், உட்கட்டமைப்பு உள்ளிட்டஅம்சங்களின் அடிப்படை யில், ஏ அந்தஸ்து வழங்கப்பட்டது.

இதன் மூலம் அகில இந்தியஅளவில் 2-ம் இடமும், தமிழகத்தில் முதலிடமும் பெற்ற அரசுப் பல்கலைக்கழகம் என்ற பெருமை கிடைத்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் கடந்த 2020 ஜனவரி மாதம் 13 படிப்புகளை ஒரு பருவத்தில் மட்டும் நடத்த யுஜிசி அனுமதி வழங்கியது. இதனடிப்படையில் இதுவரை ஒருமுறை மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

மேலும், இணையவழிக் கல்வியில் 7 படிப்புகளை நடத்த பெரியார் பல்கலை.க்கு மானியக்குழு கடந்த 2021-ல் அனுமதி வழங்கியது. யுஜிசி அனுமதி வழங்கிய படிப்புகள் மட்டுமே பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் இதுவரை நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x