Published : 01 Jun 2022 05:54 AM
Last Updated : 01 Jun 2022 05:54 AM
சென்னை: இந்தியாவில் உயர்கல்வி பயிலச் செல்வோரின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி கூறினார்.
சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரியின் (தன்னாட்சி) 46-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 1,868 பேர் இளங்கலைப் பட்டம், 547 பேர் முதுகலைப் பட்டம் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
நந்தனம் கல்லூரி 5 படிப்புகளுடன் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு புதிதாகத் தொடங்கப்பட உள்ள பி.காம். (நிதி), பி.எஸ்சி. (புள்ளியியல்), பி.ஏ. (பொது நிர்வாகம்) ஆகியவற்றைச் சேர்த்தால், இங்கு கற்பிக்கப்படும் படிப்புகளின் எண்ணிக்கை 16-ஆக உயரும்.
பெண்கள் அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. மாணவர்கள் படிக்கும்போதே வேலைவாய்ப்பு பயிற்சிக்கான திறன்களைப் பெற்று, வேலை தேடுவோராக இல்லாமல் வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும் என்ற நோக்கல் தொடங்கப்பட்டது ‘நான் முதல்வன்’ திட்டம்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வுக்கு இணையான தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பக் கல்வி அளவிலேயே பொதுத் தேர்வு நடத்தினால் இடைநிற்றல் அதிகரிக்கும். எனவே, தமிழகத்துக்கு உகந்த வகையில் மாநில கல்விக் கொள்கையை உருவாக்கத் திட்டமிட்டு, தமிழக அரசு உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழு விரைவில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.
அரசுப் பள்ளி மாணவிகளின் உயர்கல்விக்காக மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயர்கல்வி பயிலும் பெண்களின் அதிகரிக்கும். இந்தியாவில் உயர்கல்வி பயிலச் செல்வோரின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம். இது 53 சதவீதமாக உள்ளது.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, “இந்தக் கல்லூரியில் 1,000 பேர் அமரும் வகையில் கலையரங்கம் கட்ட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் குளிர்சாதன வசதியும் செய்து தரப்படும். மேலும், விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் கிராமப்புற மாணவர்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுக்க, சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதி வளாகத்தில் புதிய விடுதி கட்ட ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானப் பணிகள ்தொடங்கும்” என்றார்.
விழாவில், மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன், கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன், மண்டல இணை இயக்குநர் ஆர்.ராவணன், கல்லூரி முதல்வர் ஜெயச்சந்திரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment