Last Updated : 31 May, 2022 07:43 PM

 

Published : 31 May 2022 07:43 PM
Last Updated : 31 May 2022 07:43 PM

வழக்குப் பதிவு செய்யாத எஸ்ஐ-க்கு மனித உரிமை ஆணையம் விதித்த அபராதத்துக்கு ஐகோர்ட் தடை

உயர் நீதிமன்றம் கிளை, மதுரை.

மதுரை: வழக்குப் பதிவு செய்யாததற்காக சார்பு ஆய்வாளருக்கு அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது.

கரூர் டவுன் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜி.நாகராஜன். இவர் வாங்கல் காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது வழக்கறிஞர் கனகராஜ் என்பவர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக மாதவன் என்பவர் புகார் அளித்தார். விசாரணைக்கு பின் புகாரில் உண்மை இல்லை என்று கூறி முடிக்கப்பட்டது.

இந்நிலையில், மாதவன் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அளித்தார். அதனை விசாரித்த மனித உரிமை ஆணையம், நாகராஜனுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது. இதை ரத்து செய்யக் கோரி நாகராஜன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை நீதிபதிகள் சுரேஷ்குமார், விஜயகுமார் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜோசப் சத்தியநேசன் வாதிட்டார்.

பின்னர், புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டு குற்றம் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யப்படும். அப்படியும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாவிட்டால் எஸ்பியிடம் முறையிடலாம், நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடரலாம். இவற்றை செய்யாமல் புகார்தாரர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது மனித உரிமை மீறல் என்று நேரடியாக மனித உரிமை ஆணையம் சென்றுள்ளார். இதை ஏற்க முடியாது.

மனுதாரருக்கு அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மனு தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய பதிவாளர் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x