Published : 31 May 2022 05:51 PM
Last Updated : 31 May 2022 05:51 PM
மதுரை: தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை (Tamilnadu government Tribal Welfare department) மூன்று ஆண்டுகளில் ரூ.265 கோடி நிதியை பயன்படுத்தாமல், அந்த நிதியை திருப்பி ஒப்படைத்துள்ளது. அந்த நிதி தற்போது வனத்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பிற துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திரட்டிய தகவல்களைப் பகிர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் எஸ்.கார்த்திக், ''மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இணைந்து தமிழகத்தில் பழங்குடியினர் நலத்துறைக்கு கடந்த 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய மூன்று நிதியாண்டுகளில் மொத்தம் ரூ.1,310 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.
அதில் ரூ.1,045 கோடி மட்டுமே பல்வேறு அடிப்படைத் திட்டங்களுக்கு செலவு செய்துள்ளனர். மீதம் ரூ.265 கோடி செலவு செய்யப்படாமல் அரசிற்கே மீண்டும் திரும்பவும் ஒப்படைத்தள்ளனர்.
அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட நிதியிலிருந்து கடந்த 2019-20 நிதியாண்டில் வனத்துறைக்கு ரூ.10 கோடியும், அதற்கு அடுத்தாண்டு 2020-21 நிதியாண்டில் வனத் துறைக்கு ரூ.67.77 கோடியும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறைக்கு ரூ.58.17 கோடி மற்றும் பேரூராட்சிகள் துறைக்கு ரூ.4.05 கோடி என அந்த நிதியாண்டில் மட்டும் மொத்தம் ரூ.129.9 கோடி வரை பிற துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியினர் மக்களின் அடிப்படை தேவைகளான நில உரிமை பட்டா, குடியிருப்பு வீடு, கல்வி, சுகாதார திட்டங்கள், மின்சாரம், சாலை, வசதிகள் என்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முழுமை பெறாமல் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நிலையில், இவ்வாறு இந்த மக்களுக்கென ஒதுக்கப்படும் நிதியையும் பயன்படுத்தாமல் திரும்ப ஒப்படைப்பு செய்வது அதிர்ச்சி அளிக்கின்றது.
ஒப்படைக்கப்பட்ட ரூ.265 கோடி நிதி மீண்டும் பழங்குடியினர் மக்களின் நலனுக்கு செலவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் திட்டங்களுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதியை நூறு சதவீதம் பயன்படுத்துவதற்கு சிறப்புக் குழு அமைத்து தொடர் கண்காணிப்பு செய்து, பழங்குடியினர் மக்களுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்தவேண்டும்'' என்று அவர் வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT