Published : 31 May 2022 04:37 PM
Last Updated : 31 May 2022 04:37 PM
மயிலாடுதுறை: மீன்களைக் கழுவி சுத்தம் செய்யும் பணியை செய்து தனது மகளை மருத்துவம் படிக்கவைத்த ரமணி மற்றும் அவரது மகளும் மருத்துவருமான விஜயலட்சுமி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில், மீன்களைக் கழுவி சுத்தம் செய்யும் பணியை செய்து தனது மகளை மருத்துவராக்கிய அவரது தாயார் ரமணி குறித்து தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவர் விஜயலட்சுமிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக நேற்று முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெண்களின் உயர் கல்வியில் தமிழ்நாடு இன்று அடைந்திருக்கும் உயரம் என்பது அரசால் மட்டும் நிகழ்ந்த சாதனை அல்ல. மயிலாடுதுறை ரமணி போன்ற தன்னலங்கருதாத பலகோடித் தாய்மார்களின் உழைப்போடு நிகழ்த்தப்பட்ட கூட்டுச் சாதனை. வாழ்த்துகள் மருத்துவர் விஜயலட்சுமி" என்று பதிவிட்டிருந்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை நேற்றும் இன்றும் ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் ஆய்விற்காக மயிலாடுதுறைக்கு இன்று (மே 31) வந்திருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, மருத்துவர் விஜயலட்சுமி, அவரது தாயார் ரமணி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT