Published : 31 May 2022 03:59 PM
Last Updated : 31 May 2022 03:59 PM

“தமிழக அரசு 20 நாட்களுக்குள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால்...” - அண்ணாமலை எச்சரிக்கை

சென்னை: “தமிழக அரசு இன்னும் 20 நாட்களுக்குள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும். விலையைக் குறைக்காவிட்டால், தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஒருநாள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் ஏராளமான பாஜகவினர் கலந்துகொண்டனர்.

எழும்பூர் ருக்மணி லட்சுமபதி சாலையில் இருந்து பேரணியாக புறப்பட்டு வந்தவர்களை சிறிது தூரத்திலேயே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்தப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்திய வாசகங்கள் இடம்பெற்றிருந்த பதாகைகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பினா். முன்னதாக, கட்சியின் தலைவர் அண்ணாமலை, மூத்த நிர்வாகிகள் ஆகியோர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் உரையாற்றினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் அண்ணாமலை. அப்போது அவர் கூறியது: "பாஜகவைப் பொருத்தவரை இன்று சென்னை மாநகரைச் சேர்ந்த தொண்டர்கள் இங்கு சேர்ந்துள்ளனர். நாங்கள் சொன்னபடி இன்று போராட்டம் நடத்தியுள்ளோம். கோட்டையை நோக்கி பேரணி சென்றுள்ளோம்.

இன்னும் 20 நாட்கள் கொடுக்கிறோம். 20 நாட்களுக்குள் தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை 5 ரூபாய், 4 ரூபாய் குறைக்கவில்லை என்றால், 20 நாட்களுக்குப் பின்னர் பாஜக தமிழகம் முழுவதும் உண்ணாவிரத அறப்போராட்டத்தை கையிலெடுக்கும்.

ஒருநாள் நடக்கும் அந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் அரசு செவிசாய்க்கவில்லை என்றால், 30 நாட்கள் கழித்து பாஜக தொண்டர்கள், தமிழகத்திலிருந்து திருச்சியை நோக்கி வருவார்கள். அதற்கு அவகாசம் கொடுக்கமாட்டார்கள் என்று நம்புகிறோம்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x