Published : 31 May 2022 03:49 PM
Last Updated : 31 May 2022 03:49 PM
புதுச்சேரி: “புதுச்சேரியில் புதிய மதுபானத் தொழிற்சாலைகளுக்கு துணை நிலை ஆளுநர் அனுமதித் தரக்கூடாது; மீறி, தொழிற்சாலைகளை கொண்டு வர முயற்சித்தால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என அம்மாநிலத்தில் கூட்டணிக் கட்சியான அதிமுக கூறியுள்ளது.
இது குறித்து புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக துணை செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வையாபுரி மணிகண்டன் கூறியது: "புதுச்சேரி மாநிலத்தில் இயங்கி வரும் மதுபான தொழிற்சாலைகள், ரசாயன ஆலைகளால் நாள்தோறும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு நகர பகுதி முழுவதும் உப்பு நீராக மாறிவிட்டது.
குடிநீர் பற்றாக்குறையால் நகர பகுதிக்கு எங்கிருந்து தண்ணீர் கொண்டுவருவது என தெரியாமல் அரசு விழித்து வருகிறது. புதுச்சேரி மாநிலம் சுற்றுலா நகரமாக மாறி வருவதால் நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள் பெருகி, தண்ணீர் தேவை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதை உணர்ந்த அரசு, புதுச்சேரி மாநிலத்தில் மாசு ஏற்படுத்தும், நிலத்தடி நீரை உறிஞ்சும், மக்களுக்கு தீங்கு இழைக்கும் தொழிற்சாலைக்கு அனுமதி தரமாட்டோம் என சட்டசபையிலேயே வாக்குறுதி அளித்துள்ளது.
இத்தகைய சூழலில் புதுச்சேரியின் வருவாயை பெருக்குவதாக கூறி, சுமார் 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை அரசின் கலால்துறையும் வெளியிட்டுள்ளது. நிலத்தடி நீரை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், நகர மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் பிரான்ஸ் நாட்டு உதவியை பெற்று, சுகாதார குடிநீர் திட்டத்தை ஒரு புறம் அரசு மேற்கொண்டுள்ளது. மறுபுறம் நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி, புதுச்சேரி மாநிலத்தை பாலைவனமாக்கும் மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. இந்த முரண்பாடான கொள்கைகளால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும்.
இதனை புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். 4 ஏக்கரில் அமைக்கப்பட வேண்டும் என்பதால், புதிய மதுபான தொழிற்சாலைகள் அனைத்தும் கிராமப்புற பகுதிகளில்தான் அமையும். இதனால் விவசாய நிலங்களுக்கு கிடைக்க வேண்டிய நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவர். அரசுக்கு வருவாய் கிடைக்கும், வேலைவாய்ப்பு பெருகும் என கூறுவதும் பொய்யான தகவல்தான். புதுச்சேரியில் 5 மதுபான உற்பத்தி தொழிற்சாலை, ஒரு பீர் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களில் 30 சதவீதம் மட்டுமே புதுச்சேரியில் விற்கப்படுகிறது. மற்ற 70 சதவீத மதுபானங்கள் வெளிமாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் புதுச்சேரி அரசுக்கு, மதுபான தயாரிப்பு வரி மட்டுமே கிடைக்கிறது. மதுபானங்களின் விற்பனை கலால் வரி வேறு மாநிலங்களுக்கே செல்கிறது. இதே விதிகள்தான் புதிய தொழிற்சாலைகளுக்கும் விதிக்கப்படும். எனவே வரி வருவாய் கிடைக்கும், வேலைவாய்ப்பு பெருகும் என்பதும் கண்துடைப்பு நாடகம்தான். ஒரு சில தனி நபர்கள் மட்டுமே மதுபான தொழிற்சாலைகளால் ஆதாயம் அடைவார்கள். புதிதாக மதுபான ஆலைகள் திறக்கும் விஷயத்தில் மவுனம் காக்கும் ஒரு சில அரசியல் கட்சி தலைவர்களை புதுச்சேரி மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு துணைநிலை ஆளுநர் அனுமதி வழங்கக்கூடாது. இது குறித்து அதிமுக சார்பில் பசுமை தீர்ப்பாயம், பிரதமரின் நீர்நிலைகளை பாதுகாக்கும் பிரிவு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அதிமுக சார்பில் புகார் செய்ய உள்ளோம்.
இதனையும் மீறி மதுபான தொழிற்சாலைகளை கொண்டுவர முயற்சித்தால், புதுச்சேரி மாநில மக்கள் சார்பில், கட்சித் தலைமை அனுமதி பெற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். மக்களை திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்" என்று வையாபுரி மனிகண்டன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT