Published : 12 May 2016 02:48 PM
Last Updated : 12 May 2016 02:48 PM
கோவில்பட்டி தொகுதியில் அதிமுக, திமுக, மதிமுக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதில் யார் மகுடம் சூடப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தீப்பெட்டி ஆலைகள், பட்டாசு ஆலைகள், நூற்பாலைகள் அதிகம் இருப்பதால் தொழிலாளர்களை அதிகம் கொண்டது கோவில்பட்டி தொகுதி.
தொழிலாளர்கள் அதிகம் இருந்தால் அங்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவாக இருக்கும் என்பதற்கு கோவில்பட்டி தொகுதியும் விதிவிலக்கல்ல. இந்த தொகுதி இதுவரை சந்தித்த 14 தேர்தல்களில் 7 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே வென்றுள்ளது.
கடம்பூர் செ.ராஜூ
இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கடம்பூர் செ. ராஜூ மீண்டும் போட்டியிடுகிறார். ஆளும்கட்சி பலம், நடப்பு எம்எல்ஏ ஆகியவை அவருக்கு வலுசேர்க்கின்றன. மேலும், தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர், எளிதில் அணுகக்கூடியவர் என்பது கூடுதல் பலம்.
கடந்த 5 ஆண்டுகள் ஆளும் கட்சி எம்எல்ஏவாக இருந்தபோதிலும் தொகுதிக்கு பெரிய அளவிலான எந்த திட்டங்களையும் கடம்பூர் ராஜூ செய்யவில்லை என, எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுவாது பாதகமாக பார்க்கப்படுகிறது.
அ. சுப்பிரமணியன்
திமுக சார்பில் அ. சுப்பிரமணியன் போட்டியிடுகிறார். கழுகுமலை பேரூராட்சித் தலைவராக இருந்தவர். புதுமுகம் என்பதால் அவர் மீது பெரிய அளவிலான புகார்கள் எதுவும் இல்லாதது, காங்கிரஸ், புதிய தமிழகம், முஸ்லீம் கட்சிகள் போன்ற வலுவான கூட்டணி, தொகுதியில் உள்ள பெரும்பான்மையான சமுதாயத்தை சேர்ந்தவர் என்ற பலம் ஆகியவை சுப்பிரமணியனுக்கு வலுசேர்க் கின்றன. அதேநேரத்தில் சாதி ரீதியாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு இவருக்கு மிகப்பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது.
விநாயகா ஜி.ரமேஷ்
கோவில்பட்டி தொகுதியில் தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி- தமாகா அணி சார்பில் மதிமுக வேட்பாளராக விநாயகா ஜி. ரமேஷ் போட்டியிடுகிறார். முதலில் வைகோ தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த போது திடீரென வேட்பாளரை மாற்றி அறிவித்துவிட்டார்.
திடீர் வேட்பாளரானாலும் வலுவான வேட்பாளராகவே பார்க்கப்படுகிறது. தொகுதி முழுவதும் நன்கு பரிச்சயமானவர். பல்வேறு அமைப்புகளில் தன்னை இணைத்துக் கொண்டு சமுதாய பணிகளை செய்து வருகிறார். அனைவரிடமும் எளிமையாக பழகக்கூடியவர். ஏற்கெனவே மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பி னராக பணியாற்றியவர் என்பன போன்றவை விநாயகா ரமேஷூக்கு சாதகமான விசயங்கள்.
கோவில்பட்டி தொகுதியை பொறுத்தவரை 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் அதிமுக, திமுக, மதிமுக இடையே மும்முனைப் போட்டியே நிலவுகிறது. இதில் மகுடம் சூடப்போவது யார் என்பதை அறிய வரும் 19-ம் தேதி வரை பொறுத்திருந்து தான் ஆகவேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT