Published : 31 May 2022 07:37 AM
Last Updated : 31 May 2022 07:37 AM
விழுப்புரம்: அரசு நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்கள் வந்துள்ளன. பிரதமராக மோடி வந்தபின் ஊழல் குறைந்துள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அன்பு
மணி ராமதாஸ், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தப்பின் ஊழல் குறைந்துள்ளது. அரசு நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மொழி பற்றிய சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
இந்தியாவை பொருத்தவரை எந்த ஒரு மொழியும் தேசிய மொழியும் அல்ல, மாநில மொழியும் அல்ல. இந்தி, தமிழ் உள்ளிட்ட அலுவல் மொழிகள் தான் உள்ளன. எனவே, எந்த ஒரு மொழியையும் பெரியது, சிறியது என பிரித்துப்பார்ப்பது தவறு. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் மது அருந்துதல், போதைப் பொருள்களை பயன்படுத்துதல் போன்ற கலாசாரம் கடந்த 10 ஆண்டுகளாகவே தலைதூக்கியுள்ளது. மதுவுக்கு எதிராக 40 ஆண்டுகளாக பாமக நிறுவனர் ராமதாஸ் போராட்டம் நடத்தி வருகிறார். திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சிக்கு வந்த கட்சிகள்தான் மதுவை பெருக்கி சீரழித்து விட்டன.
அடுத்த தலைமுறையை கெடுக்கும் மதுவை ஒழிப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிந்தித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிபடி, அடுத்த 4 ஆண்டுக
ளுக்குள் மதுவை ஒழிப்பதற்கான செயல் திட்டங்களை அறிவிக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் பாதிக்கப் படுவதாக தமிழக டிஜிபி காணொலி காட்சியை வலைதலங்களில் வெளியிட்டுள்ளார். இந்த சூதாட்டத்தால் ஆண்டுக்கு 50 பேர்களுக்கும் மேல் தற்கொலை செய்து வருகின்றனர். இதை தடுப்பதற்காக பேரவையில் சட்டத்திருத்த மசோதாவை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்.
2016 பேரவைத் தேர்தலுக்கு முன்பு ‘மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ என நவீன பிரச்சாரத்தை தொடங்கி தேர்தல் வரைவு அறிக்கையை முன்கூட்டியே வெளியிட்டோம். அதை திமுக, அதிமுக கட்சிகள் காப்பி அடித்துவிட்டன. எனவே, இப்போது ‘பாமக 2.0’ என்ன என்பதை முன்கூட்டியே சொல்ல மாட்டோம் என்று கூறினார்.
கூட்டணி தொடர்கிறதா?
தொடர்ந்து செய்தியாளர்கள், ‘தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக நீடிக்கிறதா?, 2024 மக்களவைத் தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு என்ன?’ என்று அன்புமணியிடம் கேட்டபோது, “2026 சட்டப்பேரவைத் தேர்தல்தான் எங்களது இப்போதைய இலக்கு. அதை மையமாக வைத்துதான் எங்களது செயல் திட்டத்தை வகுத்து உள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT