Published : 23 May 2016 11:29 AM
Last Updated : 23 May 2016 11:29 AM

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலர் ராஜினாமா கடிதம்: சென்னை மா.செ. கூட்டத்தில் நிர்பந்தமா?

திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 4 தொகுதிகளிலும் திமுக தோல்வியடைந்ததால் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியை க.செல்வராஜ் ராஜினாமா செய்வதாகக் கூறி, தலைமைக்கு நேற்று கடிதம் அனுப்பியிருப்பது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வடக்கு மாவட்ட திமுகவினர் கூறியதாவது:

திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அவிநாசி (தனி), திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் ஆகிய 4 தொகுதிகளிலும் திமுக தோல்வியடைந்தது.

திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாநகராட்சி கவுன்சிலராக இருந்து, அதிமுகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.என்.விஜயகுமாரிடம் 37,774 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். அதேபோல், பல்லடத்திலும் 32,174 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரான அ.நடராஜனிடம் தோற்றார் கிருஷ்ணமூர்த்தி.

அவிநாசி தொகுதியில் உள்ளூர் அருந்ததியர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்ற குரலும் ஆரம்பத்தில் இருந்தே ஒலித்துவந்தது. இது கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தங்களுக்கு வேண்டப்பட்ட கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தனுக்கு, மா.செ. சிபாரிசு செய்துள்ளார் எனக் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். அதேபோல், சபாநாயகர் ப.தனபாலிடம், திமுக வேட்பாளர் இ.ஆனந்தன் 30,674 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

ஆனால், திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட க.செல்வராஜ் மட்டும் 15,933 வாக்குகள் வித்தியாசத்தில் சு.குணசேகரனிடம் தோற்றிருப்பதையும் கட்சிக்காரர்கள் குறிப்பிடத் தவறவில்லை. மற்றவர்கள், 30,000 வாக்குகளுக்கு மேல் தோல்வியடைந்துள்ளனர். இதன்மூலம் கட்சிப் பணி குறித்து சொல்லத் தேவையில்லை என்கின்றனர் கட்சியினர்.

கட்சிக்காரர்களை அனுசரித்துச்செல்வது, பணியில் வேகம் என செல்வராஜ் பெயர் எடுத்துள்ளார். ஆனால், தெற்கு தொகுதியில் வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டிருந்ததால், மற்ற தொகுதிகளை கவனிக்க முடியாத சூழ்நிலைகூட ஏற்பட்டிருக்கலாம். ஆனால், பிரச்சாரத்தை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு மேல்கூட தொகுதி பொறுப்பாளர்களிடம், அன்றாட தேர்தல் பணி குறித்துகூட பேசியிருக்கலாம் என்றனர்.

இது குறித்து க.செல்வராஜ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தேர்தலுக்கு முன்பு, சென்னையில் நடைபெற்ற மா.செ. கூட்டத்தில், ‘பொறுப்பாளர்கள் குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் வெற்றிபெற வைக்க வேண்டும். இல்லையென்றால், தங்களது பதவியை ராஜினாமா செய்துகொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி கடிதம் அனுப்பி உள்ளேன். திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோருக்கு வடக்கு மா.செ. பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக தபாலில் கடிதம் அனுப்பிவிட்டேன்.

அனைத்துத் தொகுதிகளிலும் பொதுவாகவே வேலைபார்த்தேன். எல்லா தொகுதியிலும் பரவலாக வாக்குகள் குறைந்துள்ளன, குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. எங்களது உழைப்பின் மேல் நம்பிக்கை இல்லாத நிலை ஏற்பட்டிருக்கலாம். இந்த நேரத்தில் நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. இது நான் எடுத்தமுடிவு மட்டுமே என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x