Last Updated : 05 May, 2016 05:33 PM

 

Published : 05 May 2016 05:33 PM
Last Updated : 05 May 2016 05:33 PM

அதிமுக, திமுகவுக்கு சவால் விடும் மதிமுக: தூத்துக்குடியில் மும்முனை போட்டி

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக, திமுக, மதிமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியனுக்கு ஆளும் கட்சி என்ற பலம் வலு சேர்க்கிறது. அதேநேரத்தில் கடுமையான குடிநீர் பிரச்சினை, படுமோசமான சாலைகள், போக்குவரத்து நெரிசல் போன்றவை மக்கள் மத்தியில் அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், விவிடி சிக்னல் மேம்பாலம், 1-ம் கேட்டில் சுரங்கப் பாதை, 2-ம் கேட்டில் மேம்பாலம் போன்ற முதல்வரால் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்படாதது, 4-வது பைப்லைன் திட்டம் இன்னும் முழுமையாக முடிவடையாதது போன்றவை இவருக்கு பாதகமான விஷயங்களாக பார்க்கப்படுகிறது.

திமுக வேட்பாளர்

திமுக வேட்பாளர் கீதா ஜீவன் இந்த தொகுதியில் 3-வது முறையாக களம் காணுகிறார். கடந்த முறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பெரிய அளவிலான குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லாதது, பெண்கள் மத்தியில் உள்ள நற்பெயர் போன்றவை அவருக்கு சாதகமானவை.

அதேநேரத்தில் அவரது தந்தையும், திமுக மாவட்ட செயலாளருமான என்.பெரியசாமியின் குடும்ப அரசியல், கட்சி நிர்வாகிகளிடம் நெருங்காதது போன்றவை கீதா ஜீவனுக்கு பாதகமான விஷயங்களாக பார்க்கப்படுகின்றன.

சமூக போராளி

மதிமுக வேட்பாளராக போட்டியிடும் பேராசிரியை பாத்திமா பாபு சமூக போராளி. ஸ்டெர்லைட் எதிர்ப்பு, கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து போராடியவர்.

கடந்த 2011 உள்ளாட்சி தேர்தலின் போது தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு மதிமுக சார்பில் போட்டியிட்டு 29,336 வாக்குகளை பெற்று 3-வது இடத்தை பிடித்தார். தூத்துக்குடி தொகுதியில் சுமார் 45 ஆயிரம் மீனவர் வாக்குகள் உள்ளன. இதனை குறிவைத்து பாத்திமா பாபு காய்களை நகர்த்தி வருகிறார். மேலும், இந்த முறை கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, தமாகா, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் கூட்டணியில் இருப்பதால் அவருக்கு கூடுதல் பலம்.

பாஜக வேட்பாளர்

பாஜக வேட்பாளர் கனகராஜ் கணிசமான வாக்குகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இத் தொகுதியில் பெரும்பாலான வாக்காளர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால், கணிசமாக உள்ள இந்து வாக்குகளை அவர் கவர்வார். பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சேசையா பர்னாந்துவின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால், மாற்று வேட்பாளராக மனு செய்த சின்னத்துரை வேட்பாளராக மாறியுள்ளார். இதனால் அந்த கட்சியில் ஒரு மந்தமான நிலை காணப்படுகிறது. அதுபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேரி ஜூடி ஹேமாவும் பெரிய அளவில் வாக்குகளை பிரிப்பதற்கு வாய்ப்பில்லை என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

மும்முனை போட்டி

எனவே, தூத்துக்குடி தொகுதியை பொறுத்தவரை அதிமுக, திமுக, மதிமுக வேட்பாளர்களுக்கு இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. இதில் யார் மகுடம் சூட்டப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x