Published : 13 May 2016 07:41 PM
Last Updated : 13 May 2016 07:41 PM

சாதனைகளைச் சொல்ல நூதன முறை: அதிமுக தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ராமச்சந்திரன் பேட்டி

அதிமுக பொதுக்கூட்டங்கள், பிரச்சாரக்கூட்டங்கள் ஆகியவற்றின் நேரலைகள், உங்களுக்குத் தெரியுமா, சிந்திப்பீர் வாக்களிப்பீர் உள்ளிட்ட பேரணிகள், கடந்த ஆட்சிக்காலத்துக்கும், இப்போதைய ஆட்சிக்குமான வித்தியாசங்கள் என ஒளிர்ந்து மிளிர்கிறது அதிமுக வலைதளமும், அக்கட்சியின் சமூக ஊடகங்களும். இவை அனைத்துக்கும் பின்னால் அடக்கமாக நிற்கிறார் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ராமச்சந்திரன்.

அவர் தி இந்து தமிழ் இணையதளத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டி.

ஐஐஎம் பட்டதாரி அரசியலில் நுழைந்தது எப்படி?

நான் அங்கு படித்ததற்குக் காரணமே முதல்வர்தான். எனக்குப் பெயர் வைத்ததே அவர்தான். சின்ன வயதில் இருந்தே எனக்கு அவர் மேல் மரியாதை அதிகம். நான் பொறியியல் முடித்துவிட்டு மூன்று வருடங்கள் கோவையிலேயே பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

மேலாண்மைப் படிப்பை முடித்த இளைஞனாகக் கட்சியில் சேரவேண்டும் என்று நினைத்துத்தான், ஐஐஎம் அகமதாபாத்தில் படித்தேன். படிப்பை முடித்து, வளாகத் தேர்வில் கூட கலந்துகொள்ளாமல் நேராக வந்து அதிமுகவில் இணைந்தேன்.

தேர்தல் நேரத்தில், கட்சிக்கு உங்கள் குழுவின் பங்களிப்பு என்ன?

முதல்வர், அதிமுகவின் தொழில்நுட்பப் பிரிவை எங்களிடம் ஒப்படைத்திருக்கிறார். அதன் மூலம் அரசின் திட்டங்கள், முதல்வர் வாங்கிய விருதுகள், அந்நிய முதலீடுகள் உள்ளிட்ட சாதனைகளை இளைஞர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறோம். அம்மா உணவகம், மின்வெட்டு பிரச்சினை, கட்டப்பஞ்சாயத்து, ரவுடிகள் தொல்லை ஆகியவற்றை ஒழித்தது. கட்டுக்கோப்பான ஆட்சி, பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றை சமூக ஊடகங்கள் வாயிலாக விளக்குகிறோம்.

முதல்வர் தேர்தல் அறிக்கையைப் படித்தவுடன் ஒன்றன்பின் ஒன்றாக அவற்றைத் தளத்திலும், ஃபேஸ்புக், ட்விட்டரிலும் படங்களோடு பகிர்ந்தோம். வாட்ஸ் அப் குழு இருக்கிறது. அதில் 66,000 சாவடிகள் இருக்கின்றன. ஒவ்வொரு சாவடிக்கும் ஒரு அட்மின் இருப்பார். அவருக்குக் கீழ் 250 பேர் இருப்பார்கள். அதன் மூலம் நாங்கள் அனுப்பும் ஒரு செய்தி சுமார் ஒன்றரை கோடி பேரை சென்றடைகிறது. தொகுதி வாரியாக விருப்பம் உள்ளவர்களுக்கு செய்திகளைக் கொண்டு சேர்க்கிறோம். வாட்ஸ் அப்பில் இடத்தைக் கண்டறியும் சேவை இல்லாவிட்டாலும், இந்த முறையால், எல்லாத் தொகுதிகளுக்கும் தகவலை அனுப்ப முடிகிறது.

ஆன்லைன் தவிர, நேரடியாகவும் மக்களைச் சந்தித்து அதிமுக சாதனைகளை விளக்குகிறோம்.

இளைஞர்கள் அரசியலில் ஆர்வமாக இருக்கிறார்களா?

ஆம், ஆர்வத்துடனே இருக்கிறார்கள். நாட்டின் தலையெழுத்தை அரசியலே மாற்றும் என நம்புகிறார்கள்.

இளைய தலைமுறை சமூக ஊடகங்களிலேயே பொழுதைக் கழிக்கிறது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறதே?

சமூக ஊடகங்களில் இருப்பது நல்ல விஷயம்தான். மக்களும் அரசும் சேர்ந்ததுதான் நாடு. அதில் கண்டிப்பாக மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். வெளிநாட்டில் இருப்பவர் தன் நாடு குறித்துப் பேச, கருத்துக்களைப் பகிர இவைதான் இருக்கின்றன. சமூக சேவைகளைச் செய்யவும் இவை முக்கியமாக இருக்கின்றன. இன்றைய சூழலில் காலையில் எழுந்தவுடன் சமூக ஊடகங்களைப் பார்ப்பது என்பது அன்றாடப் பழக்கங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இது தவறுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x