Published : 30 May 2022 08:54 PM
Last Updated : 30 May 2022 08:54 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை நேரில் ஆய்வு செய்தார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டு தோறும் சிறப்பு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறன. அதன்படி இந்தாண்டு டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகளுக்காக ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 683 பணிகள், 4 ஆயிரத்து 965 கிலோ மீட்டர் நீளத்துக்கு நடைபெற்று வருகிறது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் 1,356 கிலோ மீட்டர் நீளத்துக்கு 170 பணிகள் நடைபெற்று வருகிறன. இந்த பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.
இதற்கிடையில் காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக தமிழக முதல்வர் கடந்த 24-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டார். இந்த தண்ணீர் தஞ்சாவூர் மாவட்ட எல்லையை வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து கடந்த 27-ம் தேதி மாலை கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் பகிர்ந்து திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் தரமாக நடைபெறுகிறதா என்பதை தமிழக முதல்வர் நேரில் இன்று (திங்கள்கிழமை) மாலை ஆய்வு செய்தார். அப்போது, தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாபேட்டை அருகே கொக்கேரியில் பீமன் ஓடை வாய்க்கால் தூர்வாரும் பணியை நேரில் பார்வையிட்டார். இந்த பீமன் ஓடை வாய்க்காலில் ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த பணிகளை ஆய்வு செய்தும் அவற்றின் தரம் குறித்தும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கேட்டறிந்தார் .
தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் தொடர்பாக செய்தித்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும், அதேபோல் வேளாண்துறை சார்பில் மற்றும் நீர்வளத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணி முன்னேற்றங்கள் தொடர்பான புகைப்பட கண்காட்சியும் முதல்வர் பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் நேரில் சென்று அவரிடம் கைகளை குலுக்கி நலம் விசாரித்தார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே என் நேரு, எ.வ. வேலு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்பி ராமலிங்கம், எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், மாநில பெற்றோர்-ஆசிரியர் கழக துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் மற்றும் நீர்வள ஆதார துறை யின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆகியோர் உடனிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தஞ்சாவூர் சரக டிஐஜி கயல்விழி தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT