Published : 30 May 2022 08:40 PM
Last Updated : 30 May 2022 08:40 PM

மதுரை மாநகராட்சி பணியாளர்கள் 3,000 பேர் வேலைநிறுத்தம்: தெருக்களில் குவிந்த குப்பைகள்

மதுரை: மதுரை மாநகராட்சியில் 3,000 தூய்மைப் பணியாளர்கள், பொறியியல் பணியாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கியதால் சாலைகள், தெருக்களில் குப்பைகள் அள்ளப்படாமல் மலைபோல் குவிந்திருந்தன.

மதுரை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு மற்றும் பொறியியல் பிரிவில் 1,900 பணியாளர்கள், 1,900 தினக்கூலி மற்றும் ஒப்பந்த பணியாளர்கள், 2,200 அவுட் சோர்ஸிங் பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த பல ஆண்டாக மாநகராட்சி நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநகராட்சி நிர்வாகமும் அவர்களிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், அதில் உடன்பாடு ஏற்பாடாததால் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், பொறியியல் பணியாளர்கள் 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

மேல வாசல் ஹவுசிங் போர்டு பகுதியில் 3,000-க்கும் மேற்பட்ட மாநகராட்சிப் பணியாளர்கள் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பெரும்பாலான தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு வராததால் மாநகராட்சியில் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கப்படாமல் குப்பைகள் மலைப்போல் தேங்கின.

சாலைகள், தெருக்களில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிரம்பி வழிந்தன. பொறியியல் பணியாளர்கள் பணிக்கு வராதாதல் மாநகராட்சி பாதாள சாக்கடைகளில் ஆங்காங்கே அன்றாட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல், அவை சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி தூர்நாற்றம் ஏற்பட்டன. நீரேற்று நிலையங்களில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. அதனால், மாநகராட்சியின் பணிகள் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்தது.

மதுரை சாலைகளில் குவிந்துள்ள குப்பைகள் | படங்கள்: ஆர்.அசோக்

மாநகராட்சி ஆணையாளர் கா.க.கார்த்திகேயன், தூய்மைப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி வருகின்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், பொறியியல் பணியாளர்கள் கூறியது: ''தினக்கூலி தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக்கிட வேண்டும், இந்த விகவாரத்தில் மதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும், நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனடியாக பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்;

தொகப்பூதிய பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தூய்மைப் பணியாளர்களுக்கு முன்களப் பணியாளர்கள் என்கிற முறையில் அறிவித்த கரோனா ஊக்கத் தொகை வழங்க வேண்டும். அனைத்துப் பணியாளர்களும் பணி செய்வதற்கு போதுமான பணி கருவிகளை ஆண்டுதோறும் வழங்கிட வேண்டும்; குப்பை வண்டிகள், பேட்ரி வாகனங்கள் பழுதடைந்தால் அதை நிர்வாகமே சரி செய்து கொடுக்க வேண்டும்;

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரிந்த நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்த சேமநல நிதி மற்றும் சிறப்பு சேம நல நிதியை உடனடியாக பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்; பம்பிங் ஸ்டேஷன் மற்றும் எல்சிவி டிரைவர்களுக்கு வங்கி மூலம் ஊதியம் வழங்கிட வேண்டும்; நிரந்தரத் தன்மை கொண்ட பாதாள சாக்கடை, கழிவு நீர் வெளியேற்றம், தெருவிளக்கு, குடிநீர், டிரைவர்கள் பிரிவுகளிலும் ஒப்பந்தமுறையை கைவிட வேண்டும்' என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x