Published : 30 May 2022 05:20 PM
Last Updated : 30 May 2022 05:20 PM
சென்னை: "அரசு அலுவலகங்கள்,மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு! அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை.அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பொருட்டு இன்று திருச்சிராப்பள்ளிக்கு வருகை தந்த முதல்வர், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அலுவலக வருகைப் பதிவேடு மற்றும் இதர பதிவேடுகளை ஆய்வு செய்து, பின்னர், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, முதல்வர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களின் செயல்பாடுகள் குறித்தும், புதிய பேருந்து நிலைய அமைப்புப் பணியின் நிலை மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், குடிநீர் இணைப்பு, கட்டட அனுமதிகள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சொத்துவரி பெயர் மாற்றம் போன்ற பொதுமக்களுக்கான சேவைகளை தாமதமின்றி விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டதோடு, குடிநீர் இணைப்பு பணிகள் மேற்கொள்ளும் போது தோண்டப்படும் சாலைகளை மீண்டும் பழைய நிலையிலேயே இருக்கும்படி உடனடியாக சீர்செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT