Published : 30 May 2022 05:42 PM
Last Updated : 30 May 2022 05:42 PM
சென்னை: “சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் மழைநீர் வடிகால் திட்டத்தை சுயபரிசோதனை செய்ய வேண்டும்” என்று 12-வது வார்டு கவுன்சிலர் கவி கணேசன் தெரிவித்தார்.
சென்னை மாமன்றக் கூட்டத்தில் நேரமல்லா நேரத்தில் 12-வது மாமன்ற உறுப்பினர் கவிகணேசன், மழைநீர் வடிகால் பணிகள் குறித்து பேசினார். இந்த பேச்சில், 'மழைநீர் வடிகால் திட்டங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும். மழைநீர் வடிகால் கால்வாய் சரி செய்யப்படவில்லை என்றால் வரும் காலங்களில் பிரச்சினைதான் ஏற்படும். கடந்த ஆட்சியில் அவசர அவசரமாக டெண்டர் விடப்பட்டது. மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்கு மற்றும் சரிசெய்ய ஒதுக்கப்பட்ட 3 ஆயிரம் கோடி ரூபாயை பயன்படுத்த வேண்டும். எனவே, அவசரமாக இந்த டெண்டர்கள் விடப்பட்டது.
திராவிட ஆட்சியில் தமிழக முதல்வர் அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்துகிறார். முதல்வர் வெள்ளம் குறித்து அதிக கவலைப்படுகிறார். வேட்டியை மடித்துக் கட்டி முதல்வர், மாமன்ற உறுப்பினர் வெள்ள நேரத்தில் பணியாற்றினார்கள். இனிமேல் இந்த நிலை வரக் கூடாது.
எந்தப் பகுதியில் தண்ணீர் நிற்கும் என்பது மக்கள் பிரநிதிகள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களுக்கு தெரியும். இதைக் கடந்த கால ஆட்சி கேட்கவில்லை. அந்தப் பகுதியில் உள்ள நிலவியலுக்கு எற்றது போல் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவீடுகளை வைத்துக் கொண்டு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தப் பணிகளை செயல்படுத்த ஒருங்கிணைப்பு வேண்டும். Ego system இல்லை என்றால் eco system பாதிக்கப்படும். எனவே, நிலவியலுக்கு எற்ற வகையில் மழைநீர் அமைக்க வேண்டும். இதை செய்ய தவறினால் வரும் மழைக் காலத்தில் அனைவரும் வேட்டியை தூக்கிக் கட்டி நிற்க வேண்டும்.
ஒப்பந்ததாரர்கள் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். தொழில்நுட்ப பயிற்சி அளிக்க வேண்டும். நன்றாக இருக்கிற மழைநீர் வடிகால்களை உடைக்கிறார்கள். இலக்கு நிர்ணயம் செய்து இந்தப் பணிகளை செய்யக் கூடாது. அழுத்தம் தரக்கூடாது" என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி "ரூ.321 கோடியில் கொசஸ்தலை ஆறு பகுதியில் பணி நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகள் இன்னும் இந்தப் பணி நடைபெறும். தற்போது 21% மட்டுமே முடிந்துள்ளது. மாமன்ற உறுப்பினர்கள் எதாவது புதிய ஆலோசனை அல்லது தீர்வை அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். திருப்புகழ் கமிட்டி அடிப்படையில் IIT மூலம் கால்வாய் வழித்தடம் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
இதைப்போன்று பல இடங்களில் மழைநீர் வடிகால் இடித்து கட்டப்படுவதாக பல உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT