Published : 30 May 2022 01:44 PM
Last Updated : 30 May 2022 01:44 PM

“என்னைப் பார்த்து அல்ல... காங்கிரஸ் கொள்கைகளைக் கண்டு மத்திய அரசு அஞ்சுகிறது” - ப.சிதம்பரம்

சென்னை: “புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை பற்றி எல்லாம் நான் புதிதாக கருத்து சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளைக் கண்டு மத்திய அரசு அஞ்சுகிறது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "அனைத்து தோழமைக் கட்சியினருக்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இங்கு குழுமியுள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் இந்நாள் தலைவர்கள் அனைவரும் இங்கு வந்திருப்பது எனக்கு பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இவ்வாறு அனைவரும் சேர்ந்து இந்த வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறோம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நான் தெரியபடுத்தியுள்ளேன். அவரும் தன்னுடைய மகிழ்ச்சியை பாராட்டை தெரிவித்துள்ளார். வரும் 3-ம் தேதிக்குப் பிறகுதான் தேர்தல் உண்டா இல்லையா என்பது தெரியவரும், அதன்பின்னர் நான் செய்தியாளர்களிடம் விரிவாக பேசுகிறேன்” என்றார்.

சிபிஐ சோதனை தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், "புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை பற்றி எல்லாம் நான் புதிதாக கருத்து சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. 2 நாட்களுக்கு முன்னால் ஷாருக்கானின் மகன் வழக்கு எந்த விதத்தில் முடிந்தது என்று உங்களுக்குத் தெரியும். ஜார்கண்ட் முதல்வர் குற்றம்சாட்டியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் அதிரஞ்சன் சவுத்ரி சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதை எல்லாம் வைத்து நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.

சாதாரண மக்கள் எல்லாம் ஏறத்தாழ ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர். எனவே, நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள். என்னைப் பார்த்து பயப்பட நான் என்ன சிங்கம் புலியா? ஆனால், நான் காங்கிரஸ் கட்சியை பிரதிபலிக்கும் மனிதன். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை அழுத்தமாக உரத்த குரலிலே எழுதி, சொல்லி வருபவன், எனவே. என்னைப் பார்த்து பயப்படுவதாக நான் நினைக்கவில்லை. என்னைப் பார்த்து பயப்படுவதாக நானே பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடாது. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளைக் கண்டு அவர்கள் அஞ்சுகின்றனர்” என்றார்.

மாநிலங்களவைத் தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "வேட்பாளர்களை நான் தேர்வு செய்யவில்லை. கட்சிதான் தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் காங்கிரஸ் கட்சியில் என்னைவிட தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் பலர் உள்ளனர். ஆனால், வேட்பாளர் தேர்வு குறித்து நான் எப்படி கருத்து சொல்ல முடியும்" என்று ப.சிதம்பரம் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x