Last Updated : 30 May, 2022 06:26 AM

 

Published : 30 May 2022 06:26 AM
Last Updated : 30 May 2022 06:26 AM

கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றம்: மூன்று மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க உத்தரவு

கோவை: தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் சென்னையிலும், அதன் கிளை மதுரையிலும் இயங்கி வருகிறது. காலாவதியான பொருட்கள் விற்பனை, கூடுதல் விலை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவை குறைபாட்டால் பாதிக்கப்படுவோர் நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெறலாம்.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான இந்த ஆணையங்களில், பாதிக்கப்பட்டோர் நேரடியாக மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறவும் வழிவகை உள்ளது. இதில், நிவாரணம் கோரும் தொகை ரூ.50 லட்சம் வரை இருந்தால், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையமும், ரூ.50 லட்சத்துக்கு மேல் ரூ.2 கோடி வரை உள்ள வழக்குகளை மாநில நுகர்வோர் ஆணையமும் விசாரிக்கும். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி நுகர்வோரின் புகார் மனு அல்லது மேல்முறையீட்டு மனுவை 90 நாட்களுக்குள் விசாரித்து முடித்து வைக்க வேண்டும். ஆனால், சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் வழக்குகள் நிலுவை அதிகமாக உள்ளது. இதனால் உரிய காலத்துக்குள் மனுதாரர்களுக்கு தீர்ப்பு கிடைப்பதில்லை.

1500-க்கும் அதிகமான வழக்குகள்

கோவையில் மட்டும் தற்போதுவரை 1,500-க்கும் மேற்பட்ட வழக்குகளும், 200-க்கும் மேற்பட்ட உத்தரவு நிறைவேற்று மனுக்களும் (இபி) நிலுவையில் உள்ளன. எனவே, கோவையில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் சேலம், ஈரோடு, உதகை, திருப்பூர், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களுக்கு வழக்குகளை மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, நுகர்வோர் குறைதீர் ஆணைய அதிகாரிகள் கூறும்போது, “மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவுப்படி கடந்த 2013, 2014-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு, வாதங்கள் தொடங்கிய வழக்குகள், மேல்முறையீடு செய்து தடையாணை பெற்ற வழக்குகள் தவிர்த்து நிலுவையில் உள்ள வழக்குகள் சேலத்துக்கும், 2015-ம் ஆண்டு வழக்குகள் நீலகிரிக்கும், 2016-ம் ஆண்டு வழக்குகள் ஈரோட்டுக்கும், 2017-ம் ஆண்டு வழக்குகள் திருப்பூருக்கும், 2018-ம் ஆண்டு வழக்குகள் நாமக்கல்லுக்கும் மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு வழக்குகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள், அவர்கள் தரப்பு வழக்கறிஞருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

மேலும், இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளை 3 மாதங்களுக்குள் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ, மனுதாரர்கள், எதிர்மனுதாரர்களுக்கு எது சவுகரியமோ அந்த வகையில் விசாரித்து தீர்ப்பு வழக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது” என்றனர்.

நிரந்தர தீர்வு தேவை

கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலர் கே.கதிர்மதியோன் கூறும்போது, “மாவட்டங்கள்தோறும் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே, மனுதாரருக்கு பெரிய செலவில்லாமல் விரைவில் தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான். ஆனால், ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படும் வழக்குகளால் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. பல ஆண்டுகள் நிலுவையில் உள்ள வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றிவிட்டு அங்கு மனுதாரரை வரவழைக்கக்கூடாது. ஆன்லைனிலும் விசாரணை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், நேரடியாக விசாரணை மேற்கொள்வதுபோல இருக்காது.

மனுதாரர்கள் வழக்குக்காக வேறு மாவட்டங்களுக்கு செல்வதற்கு பதில், வழக்கு மாற்றப்படும் மாவட்டத்தின் நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர், உறுப்பினர்கள் வாரத்தில் 2 நாட்கள் இங்கு வந்து வழக்கு விசாரணை மேற்கொள்ளலாம். இதுவும் தற்காலிக தீர்வு மட்டுமே. வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டுமெனில் சென்னை, கோவை, மதுரை போன்று வழக்குகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் புதிதாக ஒரு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை உருவாக்க வேண்டும். விரைவில் தீர்வு கிடைத்தால்தான் மக்களுக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் மீது நம்பிக்கை ஏற்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x