Published : 11 May 2016 06:32 PM
Last Updated : 11 May 2016 06:32 PM
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனி தொகுதிகளில் ஒன்றான வாசுதேவநல்லூரில், அதிமுக, புதிய தமிழகம் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி உருவாகியிருக்கிறது.
இத்தொகுதி சிவகிரி மற்றும் சங்கரன்கோவில் தாலுகாக்களை உள்ளடக்கியது. விவசாயமே பிரதான தொழில். தமிழகத்தின் மிகப்பெரிய எலுமிச்சை சந்தை இங்கு உள்ளது. தேவர், நாடார், யாதவர், செங்குந்த முதலியார், தலித் சமுதாயத்தினர் மற்றும் முஸ்லிம்கள் பரவலாக வசிக்கின்றனர்.
1967 முதல் 2011 வரையிலான 11 சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் 3 முறையும், திமுக, மார்க்சிஸ்ட், தமாகா வேட்பாளர்கள் தலா 2 முறையும், மதிமுக, அதிமுக வேட்பாளர்கள் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 2006 தேர்தலில் மதிமுக வேட்பாளர் டி.சதன்திருமலைக்குமாரும், 2011-ல் அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ்.துரையப்பாவும் வெற்றிபெற்றிருந்தனர்.
10 பேர் போட்டி
தற்போதைய தேர்தலில் இத்தொகுதியில் 10 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் அதிமுக வேட்பாளர் அ.மனோகரன், திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் சு.அன்பழகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் இரா.சமுத்திரகனி ஆகியோர் முக்கியமா னவர்கள். இதுதவிர பகுஜன் சமாஜ், பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
அதிமுக வெல்லுமா?
அதிமுக வேட்பாளர் மனோகரன், மாவட்ட கவுன்சிலர், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர், திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பு களில் இருக்கிறார். 38 வயதில் இத்தனை பொறுப்புகளையும் வைத்துள்ள அவருக்கு, சீட் கொடுத் திருப்பது, அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக் கிறது. போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிர்வாகிகள் சிலர் உள்ளடி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் இத்தொகுதியில் மிகப்பெரிய வளர்ச்சிப் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாதது, அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
கூட்டணி பலம்
இத்தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் அன்பழகன் கூட்டணி பலத்துடன் களத்தில் இருக்கிறார். தொகுதியில் கணிசமாக உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் வாக்குகளும், முஸ்லிம்களின் வாக்குகளும் தங்களுக்கு கிடைக்கும் என்று அக் கட்சியினர் நம்புகிறார்கள். இவரை ஆதரித்து கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சாரம் செய்தால் பலம் அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அதிமுக வேட்பாளர் உள்ளூரைச் சேர்ந்தவர்; ஆனால் அன்பழகன் சென்னையில் தங்கியிருப்பவர் என்று மக்கள் மத்தியில் பரவலாக பேச்சு உள்ளது. வெளியூரில் இருப்பவருக்கு வாக்களிப்பதைவிட உள்ளூரில் இருப்பவருக்கு மக்கள் வாக்களிக்க நினைத்தால் அது புதிய தமிழகம் வேட்பாளருக்கு பின்னடைவாக ஆகிவிடும்.
இந்திய கம்யூனிஸ்ட்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் இரா.சமுத்திரகனியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இத்தொகுதியில் முகாமிட்டு களப்ப ணியாற்றுகிறார்கள். கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.
இருமுனை போட்டி
எனினும், தற்போதைய நிலவரப்படி அதிமுக, திமுக கூட்டணி என்ற இருமுனைப் போட்டிக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் ஈடுகொடுக்க முடியவில்லை. மதிமுக, தேமுதிக நிர்வாகிகள் சிலர் கட்சிகளில் இருந்து விலகி பிறகட்சிகளுக்கு சென்றுள்ளதும், பல கிராமங்களில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெறாததும் பின்னடைவாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT