Published : 29 May 2022 06:58 PM
Last Updated : 29 May 2022 06:58 PM
வேலூர்: தமிழக காவல் துறையில், எஸ்ஐ மற்றும் எஸ்எஸ்ஐக்களுக்கு 2 வாரத்துக்கு ஒரு முறை விடுமுறை அளிப்பது குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக காவல் துறையினரின் ஆய்வுக்கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொள்ள தமிழக டிஐபி சைலேந்திரபாபு இன்று பிற்பகல் வேலூர் வந்தார். அவரை வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ராஜேஷ்கண்ணன் (வேலூர்), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்). தீபாசத்யன்(ராணிப்பேட்டை), பவன்குமார் (தி.மலை) ஆகியோர் வரவேற்றனர். வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட டிஜிபி சைலேந்திரபாபு காவல் துறையினரின் கராத்தே பயிற்சியை பார்வையிட்டார். பிறகு, நக்சலைட் சிறப்பு பிரிவினர்களின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விளக்கும் புகைப்பட கண்காட்சி மற்றும் வேலூர் சரக காவல் துறையினரின் சிறப்பான செயல்பாடுகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து, காவல் துறையினர் தங்களது உடல் நலத்தை சீராக வைத்துக்கொள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு உடற்பயிற்சி உபகரணங்களை டிஜிபி சைலேந்திரபாபு அந்தந்த மாவட்ட எஸ்பிக்களிடம் வழங்கினார். இதையடுத்து, பல்வேறு வழக்குகளில் காணாமல் போன ரூ.12 லட்சம் மதிப்பிலான 120 கைபேசிகள் மீட்கப்பட்டு அவை உரிமையாளர்களிடம் டிஐபி சைலேந்திரபாபு வழங்கினார்.
பிறகு, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக வேலூர் மாவட்டத்தில் கடந்த 1 மாதத்தில் 2,450 கிலோ எடையுள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படையினர், கடந்த ஒரு மாதத்தில் 70 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படையினர், குடியாத்தம் கெங்கைய்யம்மன் கோயில் திருவிழாவில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்த தனிப்படையினர், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடுப்போன லாரி மற்றும் அதிலிருந்த ரூ.29 லட்சம் மதிப்பிலான பொருட்களை 6 மணி நேரத்தில் மீட்டு குற்றவாளியை கைது செய்த தனிப்படையினர், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவாக கைது செய்த தனிப்படையினருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.
இதைதொடர்ந்து, செய்தியாளர்களிடம் டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாவது, ''ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியில் மீனவ பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் புலன் விசாரணை முடிந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வட மாநிலம் உள்ளிட்ட வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை தமிழகத்தில் பணியமர்த்தும் போது அவர்களது விவரங்களை சேகரித்து அதன் பிறகு அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என தொழில் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வடமாநில தொழிலாளர்கள் மீது குற்றவழக்குகள் ஏதேனும் உள்ளதா? என்பதை கண்டறிந்த பிறகே அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என தொழில் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். வடமாநிலத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
பெருகி வரும் இணையதள குற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்களை தடுக்க சம்மந்தப்பட்ட காவல் துறையினர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தமிழக காவல் துறையினர் 2-ம் நிலை காவலர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருவதை போல, எஸ்ஐ மற்றும் எஸ்எஸ்ஐகளுக்கும் 2 வாரத்துக்கு ஒரு முறை விடுமுறை அளிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். காவல் துறையில் உயர் அதிகாரிகளால் கீழ் மட்ட அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக ஒரு சில இடங்களில் குற்றச்சாட்டு எழுகிறது. இதை தீர்க்கத்தான் இது போன்ற ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது'' என்றார்.
இந்நிகழ்ச்சியில், ஏடிஎஸ்பிக்கள், துணை காவல்கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT