Published : 29 May 2022 04:54 PM
Last Updated : 29 May 2022 04:54 PM
கிருஷ்ணகிரி: திருக்குறள் புத்தகத்தோடு தன் மகளின் திருமண பத்திரிக்கையை அச்சடித்து ஓசூர் தொழிலதிபர் வழங்கி வருகிறார்.
ஓசூர், சின்னஎலசகிரி பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம்(51), பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜோதி (45) இவர்களுக்கு பிரியதர்ஷினி (24) என்ற மகள் உள்ளார். இவர் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் கடந்த, 2020-ல், டாக்டர் பட்டம் பெற்று தற்போது மேற்படிப்பிற்காக முயன்று வருகிறார். இவருக்கும் நாமக்கல்லை சேர்ந்த டாக்டர் மதன்குமார் என்பவருக்கும் வரும் ஜூன் 1 ம் தேதி, திருமணம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் திருக்குறள் புத்தகத்தோடு தனது மகளின் திருமண பத்திரிக்கை அடித்து அசத்தியுள்ளார் தொழிலதிபர் முனிரத்தினம்.இதுகுறித்து அவர் கூறியதாவது:எனக்கு சிறுவயதிலிருந்தே தமிழில் அதீத ஆர்வம் உண்டு. அதை எப்படியாவது மகளின் திருமண விஷயத்தில் வெளிப்படுத்த வேண்டும் என உறுதி ஏற்றேன்.
அதன்படி நடைபெற உள்ள எனது மகளின் திருமணத்தில் திருக்குறள் புத்தகத்தோடு இணைத்து திருமண அழைப்பிதழை வழங்கும் எண்ணம் தோன்றியது. ஏனெனில் திருக்குறள் அனைத்து மதத்திற்கும் பொதுவான உலகப்பொதுமறையாக உள்ளது. தற்போது இளைஞர் சமுதாயத்தைத்தில் படிக்கும் எண்ணம் மிகவும் குறைந்துள்ளது.
மேலும் வசதி படைத்தவர்கள், 100 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை பத்திரிக்கை அச்சிடுவதற்கு செலவிடுகிறார்கள்.ஆனால் திருமணத்திற்குப்பின் பத்திரிக்கையை தூக்கி வீசி விடுகின்றனர். ஆனால் இதுபோல் பயனுள்ள முறையில் திருமண பத்திரிக்கை வழங்கினால் என்றும் நினைவுடன் வைத்துக் கொள்வதற்கும், இளைஞர்களுக்கு படிக்கும் எண்ணத்தை தூண்டும் என்ற எண்ணத்தில் இந்த முயற்சி எடுத்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT