Published : 29 May 2022 04:26 PM
Last Updated : 29 May 2022 04:26 PM
சென்னை: கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு வருகை தந்த அனைவரும் இதயபூர்வ நன்றி என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள கடித வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''நன்றி! வெறும் சொற்களால் அல்ல, கொள்கைமிகு செயல்களால்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் நன்றி மடல்.
'வாழ்வில் ஒரு பொன்னாள்' என்பதற்கான உண்மையான பொருளை விளக்கிடும் நாளாக மே 28 அமைந்திருந்தது என்றால் அது மிகையாகாது. நம் உயிர்நிகர் தலைவர் - நவீனத் தமிழகத்தின் தந்தை - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் நிறுவப்பட்ட முதல் திருவுருவச் சிலையை இந்தியக் குடியரசின் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்த நிகழ்வு என்பது நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும்.
''தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையில் என்றும் அழியாத தடத்தை விட்டுச் சென்றுள்ள உண்மையான பன்முக ஆளுமை கொண்டவர் கலைஞர்'' என்று குடியரசுத் துணைத் தலைவர் சூட்டிய புகழாரமும், தாய்மொழியாம் தமிழுக்குத் தலைவர் கலைஞர் ஆற்றிய அருந்தொண்டினையும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பிடச் செய்த மொழிப்பற்றையும், தலைவர் கலைஞருடன் தனக்கு இருந்த நட்பையும், அரசியல் மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தலைவர் கலைஞர் மதிப்பளித்த உயர்ந்த பண்பையும் எடுத்துரைத்த விதம் இன்னமும் காதுகளில் இனிமையாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
தமிழக முதல்வர் என்ற முறையில் திருவுருவச் சிலை திறப்பு விழாவுக்குத் தலைமை வகித்த உங்களில் ஒருவனான நான் குறிப்பிட்டதுபோல, முத்தமிழறிஞர் கலைஞரின் சிலையினைத் திறந்து வைத்திட குடியரசுத் துணைத் தலைவர் மிகவும் பொருத்தமானவர் என்பதை அவரது பேச்சு நிரூபித்து விட்டது. தலைவர் கலைஞர் மீது மாறாத அன்பு கொண்டிருக்கும் குடியரத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முத்தமிழறிஞர் தன் அண்ணனாம் பேரறிஞர் அண்ணா அருகே ஓய்வு கொள்ளும் வங்கக் கடற்கரையில் அவருக்கான நினைவிடம் மிகச் சிறப்பாகவும் வெகு விரைவாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. தன்னிடமிருந்து செங்கோலைப் பறித்தாலும் எழுதுகோலை எவராலும் பறித்திட முடியாது என்று அடிக்கடி சொல்வார் தலைவர் கலைஞர். படைப்பாற்றல் மிக்க எழுதுகோலால் செங்கோலை மீட்டு, அந்தச் செங்கோலைத் தன் எழுதுகோல் இட்ட சாதனைத் திட்டங்களுக்கான கையெழுத்துகளால் வழிநடத்திச் சென்ற வரலாறு தலைவர் கலைஞர் அவர்களுக்கு மட்டுமே உண்டு. அதனால்தான் எழுதுகோல் (பேனா) வடிவில் அவருடைய நினைவிடம் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது. வங்கக் கடற்கரையில் நம் தங்கத் தலைவருக்கு நினைவிடம் உருவாகி வரும் நிலையில், அண்ணா சாலையில் அவருக்குத் திருவுருவச் சிலை அமைத்திட வேண்டும் என்பதும் நம் நெடுநாள் எண்ணமாகும். அதற்குக் காரணம், ஏற்கனவே அந்த அண்ணா சாலையில், தந்தை பெரியார் அவர்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், திராவிடர் கழகத்தின் சார்பில் அன்னை மணியம்மையார் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞருக்கு முழு உருவச் சிலை அமைத்தார்கள். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோர் அந்த விழாவில் பங்கேற்றனர். தமிழகத்தின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறந்தபோது, அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக தலைவர் கலைஞரின் சிலையைக் கடப்பாரையால் இடித்துத் தள்ளியதை அன்றைய அரசாங்கத்தாரும் காவல்துறையினரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
தன் சிலை உடைக்கப்பட்டதை எண்ணித் தலைவர் கலைஞர் கவலைப்படவில்லை. கவிதை எழுதினார். ''உடன்பிறப்பே..! செயல்படவிட்டோர் சிரித்து மகிழ்ந்தாலும், அந்த சின்னதம்பி என் முதுகில் குத்தவில்லை. நெஞ்சில்தானே குத்துகிறான். அதனால் நிம்மதி எனக்கு" என்று தன் வலிகளையும் இலக்கிய வார்த்தைகளாக்கியவர் நம் தலைவர். இதனைத் திருவுருவச் சிலை திறப்பு விழாவிலும் நான் குறிப்பிட்டேன்.
சென்னை அண்ணா சாலையில் நம் ஆருயிர்த் தலைவரின் சிலை சிதைக்கப்பட்டு, ஏறத்தாழ 35 ஆண்டுகள் கழித்து, அதே அண்ணா சாலையில், தற்போதைய வளர்ச்சி - போக்குவரத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எந்த இடத்தில் சிலை அமைக்கலாம் என்று சிந்தித்தபோது, என் எண்ணத்தில் தோன்றிய ஒரே இடம், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம்தான். அதற்கான காரணத்தை, அன்புத் தலைவரின் உடன்பிறப்புகளான நீங்கள் அறியாதவர்களல்ல. அந்த வளாகத்தில்தான் எழில்மிகு புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை, இரவும் பகலும் கண்ணயராமல் நேரில் வந்து பார்வையிட்டுச் சிறப்பான முறையிலே உருவாக்கினார் முதலமைச்சராக இருந்த நம் உயிர்நிகர் தலைவர். நேர்த்தியாகவும் வசதியாகவும் அமைக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை இந்தியாவின் பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் திறந்து வைத்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி அம்மையார் அவர்கள் பங்கேற்றார்.
அருமையான அந்தத் தலைமைச் செயலகத்தை அரசியல் காழ்ப்புணர்வால் மருத்துவமனையாக மாற்றினாலும், கோபுரமாய் உயர்ந்து நிற்கும் அந்தக் கட்டடத்தில் கலசமாக என்றென்றும் ஒளிர்வது தலைவர் கலைஞரின் புகழ்தான். அதனால், அண்ணா சாலையில் அமைந்துள்ள அந்த வளாகத்தில், பொதுமக்கள் பார்க்கும் வகையில் தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலை அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, அதற்குரிய இடத்தைத் தேர்வு செய்து கொடுத்தேன்.
தலைவர் கலைஞர் எப்படி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டபோது ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்துப் பார்த்து கட்டச் செய்தாரோ, அதுபோலவே அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலையினை அமைக்கும் பொறுப்பினைக் கொண்ட பொதுப் பணித்துறைக்கு அமைச்சரான எ.வ.வேலு, மிகக் குறைவான கால இடைவெளியில் சிலையை அமைக்கவேண்டிய தேவை கருதி, இமைப்பொழுதும் சோர்வடையாமல், தானே முன்னின்று ஒவ்வொரு பணியையும் சிறப்பாக மேற்கொண்டார்.
தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலையை உயிரேட்டமாக வடிவமைத்த திராவிடச் சிற்பி தீனதயாளன் அரும்பணியும் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியதாகும். சிலை உருவாக்கப் பணியை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ஒவ்வொரு நாளும் நேரில் சென்று பார்வையிடுவதும், சிலை அமைக்கப்படும் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் வலுவான பீடம் அமைத்திடவும், சிலை அமையும் இடத்தைச் சுற்றிலும் பூங்கா போன்ற பசுமையை உருவாக்கிடவும் எடுத்துக்கொண்ட அவருடைய அயராத முயற்சிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவருக்கும், இப்பணியில் துணையாக இருந்த பொதுப்பணித்துறை உயராதிகாரிகள், அத்துறை சார்ந்த அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
'கம்பீரக் கலைஞர்' என்கிற இசைமுரசு அனீபா அவர்களின் குரலில் அமைந்த பாடல் போல, திருவருவச் சிலையும் அதன் திறப்பு விழாவும் சிறப்பாக அமைந்ததில் உங்களில் ஒருவனான எனக்குப் பெரும் மனநிறைவு. விழாவைச் சிறப்பிக்கும் வகையில் வருகை தந்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் குடும்பத்தினர், ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் அன்பு அண்ணன் வைகோ எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் தோழர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அன்புச் சகோதரர் தொல்.திருமாவளவன் எம்.பி., தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் எம்.எல்.ஏ., அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
'கலைஞர்' எனும் பெயரினைப் போற்றுகிற வகையில் வருகை தந்திருந்த கலைத்துறையைச் சேர்ந்த 'சூப்பர் ஸ்டார்' அன்பு நண்பர் ரஜினிகாந்த், 'திராவிட இனமுரசு' சத்யராஜ், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், எந்நாளும் எந்நிலையிலும் தலைவர் கலைஞரை தன் தமிழ் ஆசானாகக் கருதும் 'கவிப்பேரரசு' வைரமுத்து உள்ளிட்ட திரைத்துறை சார்ந்தோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன். விழாவில் பங்கேற்ற தமிழ்ச் சான்றோர்கள் நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகை - ஊடகத் துறையினர், தலைவர் கலைஞரின் உடல்நலன் பேணிய மருத்துவர்கள், தொழில்துறையைச் சார்ந்தவர்கள் மற்றும் அனைத்துத் துறையைச் சார்ந்தவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். விழாவில் நன்றியுரை ஆற்றிய தலைமைச் செயலாளருக்கும் விழா சிறக்க ஒத்துழைப்பு நல்கிய அரசுத் துறை சார்ந்த அனைத்து அதிகாரிகள், அலுவலர்களுக்கும்; சிறப்பானதொரு வரவேற்பை நல்கிய சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவருக்கும் என் நன்றி.
'இது நம்ம வீட்டு விழா' என்ற உணர்வுடன் சிறப்பு விருந்தினர்களுக்கு அரங்கத்தில் இடம் தந்து, அரங்கிற்கு வெளியேயும் அண்ணா சாலை - வாலாஜா சாலை ஓரத்திலும் திரளாக நின்று கருப்பு - சிவப்பு இருவண்ணக் கொடியசைத்து, திருவுருவச் சிலை திறப்பு விழாவை எழுச்சிமிக்கதாக ஆக்கிய கழக உடன்பிறப்புகளாகிய உங்களுக்கு என் உள்ளத்திலிருந்து ஊறி வரும் நன்றியினை உரித்தாக்குகிறேன்.
அண்ணா சாலையில் தந்தை பெரியார் சிலைக்கும் பேரறிஞர் அண்ணா சிலைக்கும் நடுவில் நிலைத்து நிற்கிறது முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலை. இருவரிடமும் அரசியல் - சமூகநீதிப் பாடம் பயின்று, பல்கலைக்கழகமாக உயர்ந்தவரன்றோ நம் உயிர்நிகர் தலைவர்! அதனால்தான் அவருக்கு மிக உயரமான சிலை, உயிரோட்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. திருவுருவச் சிலையை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் திறந்து வைத்த பிறகு, அந்த சிலை அருகே நின்று படம் எடுத்துக் கொண்டபோது, 'உடன்பிறப்பே..' என்கிற அந்த காந்தக் குரல் கம்பீரமாக அழைப்பது போன்ற உணர்வினைப் பெற்றேன். நேரலையில் கண்ட உடன்பிறப்புகளாம் உங்களுக்கும் அதே உணர்வு ஏற்பட்டிருக்கும் என்பதை அறிவேன்.
அந்த உணர்வுதான் நம்மை தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. 'நமது அரசு' என்று பொதுமக்கள் கருதும் அளவில் இன்றைய தமிழக அரசை இயக்கிக் கொண்டிருக்கிறது. உயிர்நிகர் தலைவர் கலைஞர் எப்போதும் நம்முடன் இருக்கின்ற உணர்வுடனேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் அவருக்கு சொற்களால் நன்றி செலுத்துவது போதாது. கொள்கைத்திறன் மிக்க செயல்களே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான - உறுதியான நன்றியாகும்.
தலைவர் கலைஞரை 7-8-2018 அன்று இயற்கை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டது. ஆனால், அவர் ஊட்டிய உணர்வுகளை எந்த சக்தியாலும் ஒருபோதும் பறித்திட முடியாது. பன்முக ஆற்றல் கொண்ட தலைவர் கலைஞர் எத்தனை பேருக்கு உந்துசக்தியாகத் திகழ்ந்திருக்கிறார் என்பதை அவரது மறைவைத் தொடர்ந்து நடத்திய புகழ் வணக்கக் கூட்டங்களில் நேரில் உணர்ந்தோம்.
பத்திரிகையாளர்கள் பங்கேற்ற புகழ் வணக்கக் கூட்டம், இலக்கியவாதிகள் பங்கேற்ற கூட்டம், திரையுலகினர் பங்கேற்ற கூட்டம், நீதியரசர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என ஒவ்வொரு துறையினர் சார்பிலும் புகழ் வணக்கக் கூட்டங்கள், தமிழக அரசியல் தலைவர்கள் பங்கேற்ற புகழ் வணக்கக் கூட்டம், இந்திய அரசியல் தலைவர்கள் பங்கேற்ற புகழ் வணக்கக் கூட்டம் இவையனைத்தும் நம் ஆருயிர்த் தலைவரின் பேராற்றலை உயிர்ப்புடன் எடுத்துக் காட்டின. அந்த உயிர்ப்பான உணர்வு நமக்குள் என்றும் இருப்பதால்தான், தேர்தல் களத்தில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று, ஆறாவது முறையாக கழக அரசு பொறுப்பேற்றுள்ளது.
ஜூன் 3, முத்தமிழறிஞர் கலைஞரின் 99-ஆவது பிறந்தநாள். அன்றைய தினம் தமிழகமெங்கும் எழுச்சியோடும் ஏற்றத்தோடும் அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட வேண்டும் என்று நேற்று காலையில் (மே 28) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள்/பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, கழகத்தின் இருவண்ணக் கொடி ஏற்றும் விழாக்கள் ஆகியவை மாவட்ட அளவில் தொடங்கி கிளைகள் தோறும் நடத்தப்பட வேண்டும். ஒரு நாளோடு முடிந்து விடுவதில்லை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் பிறந்தநாள். அவர் நிறைவேற்றிய சிறந்த திட்டங்களையும், அவர் கற்றுத் தந்த ஆட்சிக்கான இலக்கணத்தின்படி தொடர்கின்ற 'திராவிடல் மாடல்' அரசின் கடந்த ஓராண்டு கால சாதனைகளையும் மக்களிடம் ஒவ்வொரு நாளும் எடுத்துச் சென்றிட வேண்டும். கழகத்தின் இளைய தலைமுறையினரின் நெஞ்சில் அவற்றை பதியச் செய்திட வேண்டும்.
அடுத்த ஆண்டு (2023) ஜூன் 3-ஆம் நாள் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா. அதற்கு முன்னதாக, தலைவர் கலைஞரின் 99-ஆவது பிறந்த ஆண்டில் கழகத்தின் சார்பில் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, தகவல்தொழில்நுட்ப அணி உள்ளிட்ட துணை அமைப்புகளைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் 'திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள்' நடத்தப்பட வேண்டும் என்கிற தீர்மானமும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமைதி தவழும் சமூகநீதி நிலமான தமிழகத்தில் மதவெறி அரசியலுக்குத் துளியும் இடம் கொடுக்காத வகையில், சுயமரியாதை உணர்வையும் சமத்துவச் சிந்தனையையும் மேலும் மேலும் வளர்த்தெடுக்கும் விதத்தில் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் அமைந்திட வேண்டும்.
உங்களில் ஒருவனான எனது தலைமையில் அமைந்துள்ள, அனைத்து மக்களுக்குமான நமது அரசின் சாதனைகளும் திட்டங்களும் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சேர்ந்திடும் வகையில் உடன்பிறப்புகளாம் உங்களின் உழைப்பு அமைந்திட வேண்டும். மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நான் வலியுறுத்தியவாறு, கழகத் தொண்டர்களை நிர்வாகிகள் அரவணைத்து உதவிகள் செய்திட வேண்டும். 'உடன்பிறப்பே' என்று முத்தமிழறிஞர் அறிஞர் நம்மை அழைத்ததற்கேற்ப கழகம் எனும் பெருங்குடும்பத்தின் உறுப்பினர்களாக - கொள்கை உறவுகளாகத் திகழ்ந்திட வேண்டும். உயிர்நிகர் தலைவர் கலைஞரைப் போல திராவிட இயக்க உணர்வுடன் தமிழகம் அனைத்து துறைகளிலும் வளம் பெற்றிட ஓயாது உழைத்திடுவோம். முத்தமிழறிஞர் புகழ் முழங்கிடுவோம்.'' இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT