Published : 29 May 2022 04:15 AM
Last Updated : 29 May 2022 04:15 AM

பணப்பலன்கள் குறித்த அறிவிப்பு வராததால் இந்தாண்டு ஓய்வுபெறப் போகும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலக்கம்

சென்னை

இரண்டாண்டுகள் பணி நீட்டிப்புக்குப்பின் 60 வயதில் இந்தாண்டு ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணப்பலன்கள் குறித்த அரசின் அறிவிப்பு வராததால் கலக்கத்தில் உள்ளனர்.

உலகம் முழுவதும் 2020-ம் ஆண்டு கரோனா தாக்கம் ஏற்பட்ட நிலையில், இந்தியாவும் அதில் தப்பவில்லை. கரோனா காரணமாக அனைத்து செயல்பாடுகளும் முடங்கியதால், பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகத்திலும் அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு ஊதியம் இரண்டாண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன், தமிழகத்தில் 2020-ம் ஆண்டு ஓய்வு பெற இருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பணப்பயன்களை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டதால், ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 59 ஆகவும், தொடர்ந்து கடந்த 2021-ல் அது 60 ஆகவும் உயர்த்தப்பட்டது. கடந்தாண்டு மத்திய அரசு வழங்கிய அகவிலைப்படி, இந்தாண்டு ஜனவரி முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், ஈட்டிய விடுப்பு ஊதிய நிறுத்தம் தொடர்கிறது.

இந்த சூழலில், ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டதால் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு பெற்றவர்கள் இந்தாண்டு மே, ஜூன் மாதங்களில் ஓய்வு பெறுகின்றனர். கடந்த முறை ஓய்வு வயது உயர்த்தப்பட்டபோது அதை மார்ச் மாதமே அரசு அறிவித்தது. ஆனால், இந்தாண்டு ஓய்வு வயது நீட்டிப்பு மற்றும் ஓய்வு பெறுபவர்களுக்கு பணப்பயன்கள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் அரசால் வெளியிடப்படவில்லை. இதனால், 60 வயதை எட்டி ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து நிதித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், வழக்கம் போல் ஓய்வு பெறலாம் என்பதுதான் அர்த்தம். அரசு ஊழியர்களுக்காக அரசு தற்போது நிதி ஒதுக்கியுள்ளதால், ஓய்வுப்பலன்களை பெறுவதில் எந்த சிரமமும் இருக்காது’’ என்றனர். இருப்பினும், அரசிடமிருந்தோ, நிதியமைச்சரிடமிருந்தோ எந்த அறிவிப்பும் வராதது ஓய்வு வயதை எட்டியவர்களை கலக்கமடைய செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x