ரவி 2 நாளில் ஓய்வு: தாம்பரத்தின் புதிய காவல் ஆணையர் யார்? - கூடுதல் டிஜிபிக்கள் இடையே கடும் போட்டி
தாம்பரம் காவல் ஆணையர் ரவி அடுத்த இரு நாளில் ஓய்வுபெறுகிறார். இதையடுத்து அப்பதவிக்கு கூடுதல் டிஜிபிக்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
மக்களின் பாதுகாப்புச் சூழல்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு, சென்னை பெருநகரக் காவல் துறை சென்னை, தாம்பரம், ஆவடி என 3 காவல் ஆணையரகமாக பிரிக்கப்பட்டது. அதன்படி, தாம்பரம் காவல் ஆணையரகம் சோழிங்கநல்லூரிலும், ஆவடி காவல் ஆணையர் அலுவலகம் ஆவடி சிறப்புக் காவல்படை 2-ம் அணி வளாகத்திலும் செயல்படுகிறது.
இந்த புதிய இரு காவல் ஆணையர் அலுவலகங்களையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 1-ம் தேதி தொடங்கி வைத்தார். தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் 20 காவல் நிலையங்களுடனும், ஆவடி காவல் ஆணையர் அலுவலகம் 25 காவல் நிலையங்களுடன் தற்போது செயல்பட்டு வருகிறது.
தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் தொடங்கப்பட்டு அதில் முதல் காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி எம்.ரவி நியமிக்கப்பட்டார். அவர் தற்போது டிஜிபியாக பதவி உயர்வு பெற்று காவல் ஆணையராகவே தொடர்கிறார். இவர் மே 31-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். 20 காவல் நிலையம் என்பதுஒரு எஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளே கவனித்துக் கொள்ளக்கூடிய அளவில் உள்ளது தான் என்றாலும், முடிவுகளை தாமே சுதந்திரமாக எடுக்கும் அதிகாரம் கொண்டபதவி என்பதால் அதற்கு தற்போது கடும் போட்டி நிலவுகிறது.
ஏற்கெனவே, ஒருங்கிணைந்த சென்னை காவல் ஆணையரகத்தில் காவல் ஆணையராக இருந்த டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் இந்த பதவியை பெரிய அளவில் விரும்பவில்லை. மாறாக ஏற்கெனவே, சென்னை காவல் ஆணையராக முயற்சித்த தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியக இயக்குநர் (கூடுதல் டிஜிபி) அமல்ராஜ், காவல் துறை இயக்கம் (ஆபரேஷன்) கூடுதல் டிஜிபி பாலநாகதேவி, தற்போதைய நிர்வாகப்பிரிவு கூடுதல் டிஜிபி சங்கர், ரயில்வே கூடுதல் டிஜிபி வனிதா ஆகியோரிடையே 4 முனைப் போட்டி நிலவுகிறது. புதிய காவல் ஆணையராக பெண் அதிகாரியை நியமிக்கலாம் என அரசு முடிவு செய்தால் பாலநாகதேவி முன்னணியில் உள்ளதாக டிஜிபி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுஒருபுறம் இருக்க அதிகாரம்மிக்க சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பதவியில் உள்ள தாமரைக் கண்ணன் வரும் நவம்பர் மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். அந்த பதவிக்கும் இப்போதே போலீஸ் அதிகாரிகளிடையே போட்டி நிலவுகிறது.
