Published : 28 May 2022 11:12 PM
Last Updated : 28 May 2022 11:12 PM

நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாவிடில் ஜப்தி: சென்னையில் 15 நாட்களில் அதிரடியாக ரூ.40 கோடி வசூலிப்பு

சென்னை: நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்தது. இதன் காரணமாக கடந்த 15 நாட்களில் ரூ.40 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில் சொத்து வரி முக்கிய வருவாய் ஆக உள்ளது. இந்நிலையில், அதிக வரி பாக்கி உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி, சமீப காலமாக அதிக சொத்து வரி நிலுவையில் கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை மேலும் தொடர ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக சொத்து வரி பாக்கி உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி தயார் செய்தது.

இந்தப் பட்டியலின்படி நீண்ட நாட்களாக வரி செலுத்த தவறும் சொத்து உரிமையாளர்களின் சொத்தினை சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டத்தின்படி ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தாத 3 திருமண மண்டபங்கள், 6 ஹோட்டல்கள், 1 திரையரங்கம், 1 மருத்துவமனை, 4 வணிக வளாகங்கள் மற்றும் 107 வணிக அங்காடிகளுக்கு சீல் வைக்கப்பட்டும், 63 பெரிய நிறுவனங்களின் கட்டடங்களுக்கு முன்பாக ஜப்தி அறிவிப்பு வைக்கப்பட்டும் நிலுவை வரியினை உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் காரணமாக சொத்து வரியினை நீண்ட நாட்களாக செலுத்தாத நிறுவனங்கள் தங்களது சொத்து வரி நிலுவையினை செலுத்தியுள்ளனர். இதன் காரணமாக கடந்த 15 நாட்களின் ரூ.40 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2022 முதல் நடப்பு ஆண்டில் இதுவரை ரூ. 220.64 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x