Published : 28 May 2022 08:28 PM
Last Updated : 28 May 2022 08:28 PM
சென்னை: தெருக்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும் பணியை சென்னை மாநகராட்சி துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களின் பெயர்ப் பலகைகளை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாற்றியமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.
இதன்படி ரூ.8.43 கோடி செலவில் தெருக்களின் பெயர் பலகைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் இலச்சினை, தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்தப் பெயர் பலகைகளில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தப் பணியுடன் சேர்த்து தெருக்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக 171-வது வார்டில் உள்ள சாலையின் பெயரை சென்னை மாநகராட்சி மாற்றியமைத்துள்ளது.
13-வது மண்டலம், 171 வார்டில் உள்ள ஒரு தெருவுக்கு அப்பாவோ கிராமணி 2-வது தெரு என்று பெயர் இருந்தது. இந்தப் பெயரை மாற்றக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி, மாநகராட்சி உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தப் பெயரை மாற்றி சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி தற்போது இந்தச் சாலைகளின் பெயர் அப்பாவு (கி) தெரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT