Published : 04 Apr 2014 12:00 AM
Last Updated : 04 Apr 2014 12:00 AM
சிவகங்கை மாவட்டத்திலுள்ள அதிமுக நிர்வாகிகள் சிலர் தங்களது சுயலாபத்துக்காக காங்கிரஸ் மற்றும் திமுக தரப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக அதிமுக பொறுப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை தொகுதியில் கட்சியின் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது அதிமுக. கட்சியினர் மத்தியில் இவருக்கு போதிய ஒத்துழைப்பு இல்லை. தொகுதிப் பொறுப்பாளரான அமைச்சர் உதயகுமார், செந்தில் நாதனின் வெற்றிக்காக அயராது உழைத்து வருகிறார்.
ஆனால், கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சிலர் காங்கிரஸ் மற்றும் திமுக-வுக்குச் சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய மாவட்ட அதிமுக நிர்வாகிகள், “இந்தத் தொகுதியில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவதால் இப்போதே பணம் தண்ணீராக செலவிடப்படுகிறது.
அதிமுக-வில் உள்ள அதிருப்தி யாளர்களைக் கணக்கெடுத்து அவர்களோடு தினமும் தொடர்பில் இருக்கிறது காங்கிரஸ் தரப்பு.
அதிமுக வேட்பாளரின் வெற்றிக்காக மேற்கொள்ளப்படும் ரகசிய திட்டங்கள், சமுதாயத் தலைவர்கள் சந்திப்புகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் காங்கிரஸ் தரப்புக்கு எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் கூறிவிடுகின்றனர்.
தேர்தல் அதிகாரிகளிடம் புகார்
நான்கு நாட்களுக்கு முன்பு, முன்னாள் மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் பாரதியின் கணவர் சீனிவாசன் ஏற்பாட்டில் சிவகங்கையில் தேர்தல் அலுவலகம் ஒன்றை திறந்துவைத்தார் அமைச்சர் உதயகுமார்.
இந்த அலுவலகம் வாக்குச் சாவடி எல்லைக்குள் இருப்பதாக அதிமுக பொறுப்பாளர்களே தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். பணத் துக்கு ஆசைப்பட்டு இரவு பத்து மணிக்கு மேல் காங்கிரஸ் தரப்பு ஆட்களிடம் தினமும் போன் தொடர்பில் உள்ளனர்.
இதேபோல், திமுக வேட்பாளர் சுப.துரைராஜ் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. என்பதால் பழைய பாசத்தில் அவரோடும் அதிமுக-வினர் சிலர் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
வேட்பாளராக அறிவிக்கப் பட்டதுமே அதிமுக பொறுப் பாளர்கள் சிலர் அவருக்கு போனில் வாழ்த்து சொல்லியுள்ளனர்.
தேவகோட்டையைச் சேர்ந்த சட்டப்புள்ளி ஒருவர் உள்பட அதிமுக முக்கியப் புள்ளிகள் சிலரை துரைராஜ் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் இருக்கிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கு சரியான நபர்களை வாக்கு எண்ணும் ஏஜெண்டாக போடாமல் விட்டதால்தான் குழப்படியாகி, அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் தோற்கடிக் கப்பட்டார்.
இந்தத் தேர்தலிலும் அதே போன்ற நபர்களை வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் போட்டு வரலாற்றை திரும்பவைத்து விடுவார்களோ என்று பயப்படுகிறோம்’’ என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT